22 June 2009

சர்வகட்சி குழுவின் அரசியல் தீர்வுத்திட்டம் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல : திஸ்ஸ விதாரண

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினர் தயாரித்துக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் யோசனைகளுக்கு அமையவே இந்தத் தீர்வுத்திட்டம் உருவாக்கப்படுகின்றது என்று குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். எவ்வாறாயினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை எமது தீர்வுத்திட்டம் நிவர்த்தி செய்வதாக அமையும். சில விடயங்களில் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் எந்த மட்டத்தில் அமைந்துள்ளன என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறியதாவது :
"சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்து விடயங்களிலும் இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டன. தற்போது கலந்துரையாடல்கள் முடிக்கப்பட்டு தீர்வு யோசனையை பகுதி பகுதியாக தயாரிக்கும் செயற்பாடுகளில ஈடுபட்டுவருகின்றோம். விரைவில் தீர்வு யோசனையை தயாரித்துவிடுவோம். ஆனால் என்னால் திகதியை குறிப்பிட முடியாது.
எனினும் வெகு விரைவில் யோசனையை முன்வைப்போம் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த முடியும்.
சர்வகட்சி குழுவினர் தயாரிக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக்கொண்டதல்ல. மாறாக அங்கம் வகிக்கும் கட்சிகளின் யோசனைகளுக்கு அமையவும் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏதுவாகவும் திட்டம் உருவாக்கப்படுகின்றது. முக்கியமாக 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற சில குறைபாடுகளுக்கு நாங்கள் தயாரிக்கும் தீர்வுத்திட்டத்தில் தீர்வுகள் இடம்பெறும். சில விடயங்களில் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் இவற்றை மட்டுமே என்னால் கூற முடியும்." இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment