- அபூ நுஹா -
அது அக்கரைப்பற்று பஸ்நிலையம், காலை ஏழரை மணி, ஆண்டு 1982 வைகாசி என நினைக்கின்றேன். நாளை மறுதினம் மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரின் மூன்று நாள் கருத்தரங்கு. அப்போதைய லங்கா கார்டியன் ஆசிரியர் டயான் ஜயதிலக்க (இப்போது ஐநாவில் பணிபுரிகின்றார்), பேராதனை பல்கலைக்கழக மூத்த அரசியல் விரிவுரையாளர் லக்சிறி பெர்னான்டோ (பின்னாளில் சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் ஆலோசகர்), யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவிரையாளர் வரதராஜப்பெருமாள் என ஒரு அரசியல் வித்தகர்கள் குழு அம்மூன்று தினங்களும் அரசியல் பாடம் எடுக்க சத்துருக்கொண்டானுக்கு வர இருந்ததால், அம்மூன்று தினங்களுக்கும் தேவையான, அரிசி,மற்றும் உணவு வகைகளை சேமித்து, பஸ்ஸில் ஏற்றுவதற்காக மூட்டை தூக்குபவர்களை அழைத்து பேரம் பேசிக்கொண்டிருந்த போது, ஏன் தோழர் இதை நானே தூக்கி பஸ்ஸின் மேற் கூரையில் போடுகின்றேன் எனக் கூறியது மல்லாமல், நான்கு மூட்டை அரிசியையும் தனி ஒரு ஆளாக தூக்கி...........
1981 இந்தியா,மெட்ராஸ், சூளைமேடு, வஹாப் ஸ்ரீட், நம்பர் 6, சாப்பாட்டுக்கு லாட்டரி அடித்தபொற்காலம், லங்காராணி அருளர் (பொப்பாடகி மியாவின் அப்பா ) தலைக்கு நான்கு புத்தகங்களை வைத்து உழன்று கொண்டிருக்கின்றார், இளங்கோ பகல் சாப்பாட்டுக்கு எதுவும் கிடைக்காதா என குசினிக்குள் உலாவுகின்றார், சுரேஸ் ஒரு மூலையில் புத்தகமும் கையுமாக இருக்கின்றார், தம்பிலுவில் இன்பம் கியூப்பை கையில் வைத்துக் கொண்டு கிழிந்த பாயில் ஒரு ஓரமாக குத்துக்காலுட்டு இருக்கின்றார், விவேகானந்தன் (சாமியார்) மஞ்சள் காவியுடன் ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கின்றார், பாண்டியன் தோழர் உடைந்த கதிரையொன்றில்
வீட்டுக் கூரையைப் பார்த்து விறைத்துக் கொண்டிருக்கின்றார், தோழர் தாஸ் எப்போதும் போல் சிரித்துக் கொண்டு, அடுத்த வேளை உணவுக்கு யாரிடம் கையேந்தலாம் என கணக்குப் போட்டுக் கொண்டு முற்றத்தில் உலாவுகின்றார், அவர்,ஆம் அவர்தான் அந்த மாலுமி, எந்த சலனமுமில்லாமல், சாஸ்டாங்கமாக உட்கார்ந்து, அந்த நாற்றமெடுத்த டொய்லட்டை,தாய் பிள்ளைக்கு பேன் பார்ப்பது போல் அங்குலம் அங்குலமாக தேங்காய் மட்டையினால் கழுவிக் கொண்டி.....
மெட்ராஸ், நுங்கம்பாக்கம், கங்கையம்மன் கோயில் ஸ்ரிட் ,நம்பர் 33 மேல் மாடியில், பகல் கிழிந்த இரண்டு பாயில் எட்டுத் தோழர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள், குசுனிக்குள் அந்த இந்திய அம்மா சமைத்துக் கொண்டிருக்கின்றார், இன்னும் ஒரு ஆறு தோழர்கள் கீழே மலசலகூடத்துக்கருகில் திருட்டு தம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் அவர், அந்த மனிதன் ஈழ மாணவர் பொதுமன்றம் (ஜென்ரல் யூனியன் ஒப் ஈழம் ஸ்ரூடன் ) என்ற பெயரில் மாதா மாதம் வெளியிடப்படும் அந்த ஏ-4 ஸைஸ் குட்டிப் பத்திரிகைகளுக்கு, ஆறுதலாக அழகாக முத்திரை ஒட்டி, விலாசங்கள் எழுதிக் கொண்டிருக்கின்......
ஒரு தமிழ் சொல்லுக்கு அரபியில் அர்த்தம் தெரியவேண்டும். பெரம்பூர், ஜமா அத் ஏ இஸ்லாம் அமைப்பினரிடம் இதன் அர்த்தத்தை அறியலாம் என்றவுடன், உடனடியாக சைக்கிளில் பின் கெரியரில் என்னையும் வைத்துக் கொண்டு 10 மைல் தூரத்தில் உள்ள பெரம்பூருக்கு சென்று, அதில் திருப்தி ஏற்படாமல், மீண்டும் அங்கிருந்து,மண்ணடி அங்கப்பநாயக்கன் ஸாரிட் பள்ளிவாசலுக்கு, அந்த வைகாசி அக்கினி வெய்யிலில் சைக்கிள் உழக்கிய அவர் இறந்து விட்டாரா ? நல்ல ஜோக் இது.
தோழர்களே. உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? மாமனிதர், தேசத்தின் குரல், தேசப்பற்றாளர், லெப்டிணன், கேணல், தேசியத் தலைவர், சூரிய தேவன் போன்றவர்கள்தான் மரணிப்பார்கள்
மனிதர்கள், மனிதத்தை நேசிப்பவர்கள், அதுவும் சக்கிலியனாக, வண்ணானாக, பறையனாக, மூட்டைத்தூக்கியாக, வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் எவருமே ஒரு நாளும் மரணிப்பதில்லை தோழர்களே ! மரணிப்பதில்லை.
நன்றி - தேனீ இணையம்
No comments:
Post a Comment