வட மாகாணத்தில் விரைவில் 21 பொலிஸ் நிலையங்கள்
வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் முகமாக வெகு விரைவில் அப்பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவில் மடு, விடத்தல்தீவு, இலுப்பைக்கடவை, முழங்காவில், சிலாவத்துறை,பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளில் ஏழு பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. புதிய திட்டத்திற்கமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி.) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாங்குளம் பொலிஸ் பிரிவுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மூன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் (எஸ்.எஸ்.பி.) நியமிக்கப்படவுள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவில் துணுக்காய், வட்டுவாகல், புளியங்குளம், ஜெயபுரம், அக்கராயன் குளம், மல்லாவி, முறிகண்டி ஆகிய 7 இடங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. ஓமந்தைப் பகுதியில் ஏற்கனவே பொலிஸ் நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது எனவும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் அலம்பில், நெடுங்கேணி, குமுழமுனை, ஓட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய 5 பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் பரந்தன், ஆனையிறவு, சாலை ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment