12 June 2009

இந்திய விஞ்ஞானிக்கு ஜனாதிபதி அழைப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு துரிதமாகப் புனர்வாழ்வளிக்கவும் அவர்களை மீளக்குடியேற்றவும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் பசுமைப்புரட்சித் தந்தையென அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனை விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைகளில் உதவுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது ஜனாதிபதி புலிகளின் அடக்கு முறையில் இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்துவ தற்குரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதாக சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்ணிவெடி அகற்றுதல், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பவற்றுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்தில் 80 சதவீதமான மக்கள் விவசாயத்திலும் அவற்றைச் சார்ந்த தொழில் துறைகளிலும் தங்கியிருக்கும் அம் மக்களின் விவசாயம் தொடர்பான ஜீவனோபாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது தற்போதைய தருணத்தில் மிகவும் தேவையானதொன்றாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சுவாமிநாதன் தெரிவிக்கையில் வடக்கிலுள்ள விவசாயிகளுக்கு மண் வளத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நீர் வளமுகாமைத்துவம் என்பவற்றை ஆரம்பிப்பதன் மூலம் வடமாகாணத்தில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியும் என்று கூறியுள்ளார். அறுவடைக்குப் பிந்திய நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தல் என்பவை முக்கியமானவையாகும். குறிப்பாக பெண்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தல் அவசியமானது என்று புகழ்பெற்ற விஞ்ஞானியான சுவாமிநாதன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment