முகாம்களிலுள்ள மக்களை விரைவில் விடுவிக்க . இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்து
வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை விரைவாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வன்னி யுத்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாங்குளம், பரந்தன் போன்ற பிரதேசங்களில் இயங்கி வந்த அரச வங்கிகளில் சேவையாற்றிய நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களின் நிலவரம் தெரியாமல் உள்ளதாகவும் அவர்கள் முகாம்களில் இருந்தால் அவர்களைச் சுதந்திரமாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் மேற்படி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 25 வருட காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வட பகுதி மக்கள் தற்போது அகதி முகாம்களில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சிலருக்கு தமது வீடு வாசல்கள் இல்லாமல் போயுள்ளது மட்டுமல்லாமல் தமது வீடுகள் முகாம்களுக்கு அண்மையில் இருந்தும் அவர்களது வீடுகளுக்குச் சென்றுவர அனுமதிக்காத காரணத்தினால் உளவியல் ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த நிலையிலும் இம்மக்கள் இம்முகாம்களில் படும் வேதனை தொடர்பாக விசனத்தை தெரிவிக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு அம்மக்களுக்கு ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் படியும் மிக விரைவாக அவர்களது விசாரணைகளைப் பூர்த்தி செய்து முகாம்களை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்கும் படியும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமெனவும் அரசை கோரியுள்ளது.
No comments:
Post a Comment