எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகரசபைகளுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் 25-06-2009 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்ததுடன் சுயேச்சைக் குழுக்களுக்கான சின்னங்களும் வழங்கப்பட்டதாக யாழ், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர் . இதேவேளை யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும், சுயேச்சைக் குழுவொன்றுக்கான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வவுனியா நகர சபைக்கான வேட்பு மனுவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. மற்றுமொரு சுயேட்சைக் குழுவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வவுனியா நகர சபை தேர்தலில் 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளுடன் மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு வவுனியாவில் நிராகரிக்கப்பட்டது
No comments:
Post a Comment