சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் முடிவடைந்தது
இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைத் திட்டத்தை தயாரிப்பதற்கென சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தொடர்ச்சியாக பங்குபற்றி வந்த 13 அரசியல் கட்சிகளினதும் முன்மொழிவுகளும், கலந்துரையாடல்களும் நேற்றைய 128 ஆவது கூட்டத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கமைய, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனைகள் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் கடந்த 27-07-2009 குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற கூட்டங்களுடன் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களில் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றியும் இணக்கம் காணப்பட்டு விட்ட நிலையில், இறுதிக் கூட்டத்தில் இறுதியாக மத்திய மற்றும் மாகாணங்களுக்கிடையிலான காணி மற்றும் நீர் தொடர்பான அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் கட்சி பிரதிநிதிகள் சார்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் ஒரே அறிக்கையாக இணைக்கப்பட்டு, கூட்டங்களில் கலந்து கொண்ட கட்சிகளின் பரிசீலனைக்கு வழங்கப்படவுள்ளதுடன், இதற்கிடையே இணக்கம் காணப்பட்ட விடயங்களடங்கிய சாராம்ச அறிக்கையொன்றையும் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தொடர்ச்சியாக கலந்து கொண்ட கட்சிகளின் பரிசீலனைக்கு வழங்கப்பட்ட அறிக்கையானது அக் கட்சிகளின் உறுதிப்படுத்தலுடன் வந்ததன் பின்னர், அதில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக ஐ.தே.க மற்றும் ஏனைய கட்சிகளுடனும் கலந்து பேசி அவர்களது யோசனைகளும் பெறப்பட்டு தேவையேற்படும் பட்சத்தில் பொது இணக்கப்பாட்டுடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இறுதித் தீர்வு யோசனை திட்டம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, இதுவரை காலமும் கூட்டங்களில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய கட்சி பிரதிநிதிகளுக்கு நேற்றைய இறுதிக் கூட்டத்தின்போது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட இதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் நடவடிக்கைகளில் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கி மறைந்த அரச சமாதான செயலகத்தின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் கேதீஸ்வரன் லோகநாதன் மற்றும் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் ஆகியோரையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.
No comments:
Post a Comment