29 July 2009

இடைத்தங்கல் முகாம்கள் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய எவருக்கும் உரிமைகிடையாது - சட்டமா அதிபர்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லர் என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் இங்கு தங்கியுள்ளவர்களில் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, இடைத்தங்கல் முகாம்கள் தொடர்பில் அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்வதற்கான சட்ட ரீதியான உரிமை எவருக்கும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குள் மக்களை அடைத்துவைத்திருப்பதன் மூலம் அவர்களது அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டிய அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்திருந்தது. சட்டமா அதிபர் பாதுகாப்புச் செயலர் மற்றும் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மேற்படி மனு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தம்மை பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விளக்கமளிக்கையிலேயே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில், மோதல் காரணங்களால் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 8 ஆயிரம் வரையிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அரச புலனாய்வுப் பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே, மனுதாரர்கள் இதுபோன்ற அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்வதற்கு சட்ட ரீதியிலான உரிமை இல்லை. இதனைக் கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றம் குறித்த மனுவை மேலும் விசாரணைக்குட்படுத்தாது அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்-

வீரகேசரி இணையம்

No comments:

Post a Comment