13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த சமிக்ஞை - திஸ்ஸ விதாரண
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுலாக்குவது சிறந்த சமிக்ஞையாக இருக்குமென சுட்டிக்காட்டும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்;வு யோசனையின் சாரம்ச அறிக்கையொன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலாநிதி என்.எம்.பெரேரா ஞாபகார்த்த நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் அடுத்தது என்ன? எனும் தொனிப் பொருளில் பேசிய பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒரு சில கடும்போக்கு வாதிகளை தவிர தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளுமே உத்தியோகபூர்வ மொழிகளாகப்பட வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் விருப்பாக இருந்தது. எனினும் அன்று இழைத்த தவறின் காரணமாக இன்று சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழ்மொழி அந்த நிலையில் இல்லை. இன்றும்கூட பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாக நம்பும் சிலர் இருக்கின்றனர். எனினும் நாம் உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு முன்செல்ல வேண்டும்.
1983 ஆம் ஆண்டு தமிழர்கள் என்ற ஒரு காரணத்திற்காக தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, குரூரமாக கொலை செய்யப்பட்டும் அம் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டமையும் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்து விட்டது. அதுதான் தமிழ் இளைஞர்களை தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளியது.
இதேநேரம், 13ஆவது அரசியலமைப்பு திருத்தமானது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிரும் பொருட்டே கொண்டு வரப்பட்டது. இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை சரியாக அமுல்படுத்தாவிட்டால் இதிலிருந்து நாம் நாட்டுக்கும் உலகுக்கும் கூறும் செய்தி என்ன? ஆயுதங்களை கீழே வைக்கச் சொல்லிவிட்டு 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டத்துக்கு செல்லுமாறு அவர்களை அழைப்பு விடுப்பதாகவே அமையும்.
எவ்வாறிருப்பினும் இந்நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்பது ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனமான மகிந்த சிந்தனையில்? தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பொருட்டே தற்போது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவும் செயற்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட பின்னர் தமிழ் மக்கள் சமஉரிமையுடன் இந்த நாட்டுப் பிரஜைகளாக வாழ அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் சிறந்த சமிக்ஞையை அனுப்ப வேண்டும். அதற்கு 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்த சமிக்ஞையாக இருக்கும். கடந்த கால சூழ்நிலைகளில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது முஸ்லிம், சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமைகள் மாற வேண்டும். அடிப்படை விநியோகங்களை நிறைவு செய்ய வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது மத்தியிலும் அதற்கு வெளியிலும் இருக்க வேண்டும். அப்போதே ஒரே நாடாக கட்டியெழுப்ப முடியும்.
இதேநேரம், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இருக்கும் 13 கட்சிகளும் பொது இணக்கப்பாடுகளை எட்டி தற்போது இறுதி யோசனை வரைபை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தயாரிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடனும் அது பற்றி கலந்தாலோசித்து இறுதித் தீர்வு யோசனை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும். இதில் வெற்றிகரமான முடிவொன்று கிட்டுமென நம்புகிறேன் என்றார்
No comments:
Post a Comment