இடம்பெயர்ந்தோருக்காக 15 வாக்களிப்பு நிலையங்கள்
யாழ்.மாநகரசபை எல்லைக்குள்ளிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களிலுள்ள 6,242 வாக்காளர்கள் யாழ்.மாநகரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 100,417 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் இடம்பெயர்ந்திருக்கின்ற 6,242 வாக்காளர்களும் வாக்களிக்க 6 மாவட்டங்களில் 15 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ள 324 வாக்காளர்களுக்காக மட்டக்குளி சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம், பவ்லியன் ஒவ் பிள சரணங்கர விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் 2 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ள 849 வாக்காளர்களுக்காக நீர்கொழும்பு சென்.பீற்றர்ஸ் மகா வித்தியாலயம், தளுவகொட்டுவ சென்.அன்ரனீஸ் வித்தியாலயம் ஆகிய இடங்களில் இரண்டு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 320 வாக்காளர்களுக்காக கெனமுல்லை ஜீவன் முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்காக 7 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. புளிச்சங்குளம் ஒமத் பாக் மத்திய மகா வித்தியாலயம்,சாஹிரா பாத்திமா தேசிய பாடசாலை, தில்லையடி மகா வித்தியாலயம் (இரண்டு நிலையங்கள்), பல்விய சிங்கள மகா வித்தியாலயம், நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் பலப்பிட்டிய அலக்ஸா தேசிய பாடசாலை ஆகியவற்றிலேயே இந்த வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் 120 வாக்காளர்களுக்காக இக்கிரிகொல்லாவ முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டுகல பொதுநோக்கு மண்டபம், அநுராதபுரம் விழிப்புலன், செவிப்புலனற்றோர் பாடசாலை மற்றும் நச்சன்குவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வசித்த நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்து தென்மராட்சி நலன்புரி நிலையங்களிலுள்ள 70 வாக்காளர்களுக்காக அரியாலை பார்வதி வித்தியாலயத்தில் ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மேற்படி வெளிமாவட்ட முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தனக்கு அறிவிப்பார்களெனவும் அதன் பின்னரே யாழ்.மாநகரசபைத் தேர்தல் முடிவு வெளியிடப்படுமென்றும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment