27 July 2009

முதற்கட்டமாக 3000 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

வவுனியா வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு முன்னர் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ள 35 கிராமங்களையும் உள்ளடக்கிய பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அலுவலர்கள் மற்றும் அரச நிறுவனங்கள்,திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோரை அழைத்தே இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். மேலும் ஆகஸ்ட் முதல்வாரத்தில் மக்கள் குடியமரும் வகையில் சகல உட்கட்டமைப்பு வளங்களையும் பூர்த்தி செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பா.உ பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்கில் முதற்கட்டமாக 3000 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளதாகவும், இவர்களைக் குடியமர்த்தவென இனங்காணப்பட்ட கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். இதேவேளை நெடுங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு காணி விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றதும் அந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இதேவேளை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வவுனியா தெற்கு, செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment