27 July 2009

யாழ். மாநகரசபைத் தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு கண்காணிப்புக்குழு

யாழ். மாநகரசபைத் தேர்தலை கண்காணிப்பதற்கு பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான குழு (சி.எம்.ஈ.பி.)ஆகிய இரு உள்நாட்டு தேர்தல் கண்காணிப்புகுழுக்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளதாக வட மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் தயானந்த பண்டார அறிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் சட்டதிட்டங்கள் மற்றும் விதிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையாளருக்கு உதவியாகச் செயற்படுவதே பொலிஸாரின் கடமையாகும். அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் எதுவுமற்ற வகையில் தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் படி யாழ்.மாநகர சபைத் தேர்தலில் 100412 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். இதற்காக 70 வாக்களிப்பு நிலையங்களும் 35 மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் தேர்தல் மத்திய நிலையங்களில் இருப்பதற்கு ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். கட்சியின் தலைவர் மட்டுமே இவர்களை நியமிக்க முடியும். அது தொடர்பான விபரங்களையும் மாவட்டத் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டும்.

யாழ்.மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள ஆறாயிரம் வரையான வாக்காளர்கள் இடம் பெயர்ந்த நிலையில் இருக்கின்றனர். கொழும்பில் 322 பேர், கம்பஹாவில் 825 பேர், களுத்துறையில் 320 பேர், புத்தளத்தில் 4550 பேர் அநுராதபுரத்தில் 120 பேர் யாழ்ப்பாணத்தில் 70 பேர் போன்ற எண்ணிக்கையிலுள்ள இடம் பெயர்ந்த வாக்காளர்களுக்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. யாழ். நலன்புரி நிலையத்திலுள்ள 70 பேருக்காக அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் வாக்களிப்பு நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment