யுத்தம் முடிவடைந்துள்ள வேளையில் தீர்வையும் வழங்க வேண்டும்
பேரழிவினை ஏற்படுத்திக் கொண்டிருந்த கொடூர யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் இவ்வேளையில் பிரச்சினைக்குரிய தீர்வினையும் விரைவில் வழங்க வேண்டுமென சகவாழ்வு மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.முத்துக்குமார் லுணுகலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மொழிக் கொள்கை தொடர்பான செயலமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். ]
லுணுகலை பிரதேச செயலாளர் பிரபாத் அபேவர்தன தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மேலும் பேசும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந் நாட்டில் ஆரோக்கியமானதோர் சூழலுக்கான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை சுதந்திரம் பெற்றிருந்த போதிலும் 1948 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு ஆங்கிலமே அரசகரும மொழியாகப் பிரயோகிக்கப்பட்டிருந்தது. ஆங்கில மொழிக் கொள்கைக்கு எதிராக சிங்கள மக்கள் சிங்கள மொழியே அரச கரும மொழியாக்கப்பட வேண்டுமென்றும் தமிழர்கள் சிங்கள மொழியுடன் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தனர். அதையடுத்து எமது நாட்டின் மொழிகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 1956,1958,1972,1978,1987,1988 போன்ற ஆண்டுகளில் தொடர்ச்சியாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச் சட்ட ஏற்பாடுகளின் முன்னேற்றத்தினையும் ஆரோக்கியமானதோர் சூழலுக்கான மாற்றமும் ஏற்பட்டிருப்பதை எவரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
பசறை தமிழ் தேசிய பாடசாலை அதிபர் பி. ஆறுமுகம் மொழி என்பது உணர்வினை வெளிப்படுத்தும் விடயமாகும். மனிதன் மனிதனாக மாற வேண்டும். இதற்கு மொழியை ஊடகமாகக் கொள்ளல் அவசியம். மனிதனும் விலங்குகளும் ஒன்றாக மாட்டாது. மனிதனுக்கு மொழி, எழுத்து போன்ற ஊடக படிவங்கள் இருக்கின்றன. விலங்குகளுக்கு அவ் வடிவங்கள் இல்லை. உலகின் பிரதான முதன்மை மொழியாக இருந்து வருவது சீன மொழியாகும். அதற்கடுத்த படியாக இந்தி, பங்காலி, ஆங்கிலம் என்று பட்டியலிட்டுக் கொண்டு போகலாம். உலகின் நான்காவது மொழியாகவே ஆங்கில மொழி இருந்து வருகின்றது. எமது நாட்டில் இன அடிப்படையில் உருவான கலவரம் 1915 ஆம் ஆண்டிலேயே முதன் முறையாக ஏற்பட்டது. சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையிலேயே இக் கலவரம் உருவானது. கண்டி விகாரை ஒன்றிலிருந்து பெரஹரா பள்ளிவாசல் வழியாகச் செல்லும் போது சிங்களவர்களுக்கும் முஸ்லிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது என்றார்.
விரிவுரையாளர் டி.எஸ்.ரட்ணாயக்க நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் ஏந்திய அமைப்புகளினால் பெறுமதிமிக்க மனித உயிர்கள் பலியாகின. இதனை எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாது. அத்துடன், நடந்து முடிந்த யுத்தத்திலும் பேரழிவுகளை இந்நாடு எதிர்கொண்டுள்ளது. மொழிகள் பல தெரிந்திருப்பின் அதுவே பெரும் சொத்தாகும். பொருளாதாரத் தேவை அவசியம் ஏற்படும் பட்சத்தில் மாற்று மொழிகளைக் கூட இலகுவில் கற்க வாய்ப்புகள் உருவாகும். 1972 ஆம் ஆண்டு யாப்பிற்கமைய நாடெங்கிலும் நீதிமன்ற மொழி சிங்களமாக இருந்து வந்தது. மேன்முறையீடுகள், நிகழ்வுகள், தீர்ப்புகள், பதிவுகள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே இருந்தன. 1978 ஆம் ஆண்டின் யாப்பிற்கமைய அரசகரும மொழியாகத் தொடர்ந்தும் சிங்களம் இருந்ததுடன் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக இருந்தன. 1987 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட யாப்பிற்கமைய தமிழ் மொழியும் அரசகரும மொழியாக்கப்பட்டது. ஆங்கில மொழி தொடர்பு மொழியாக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment