நலன்புரி முகாம் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும் என வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் ஆபத்துக்களை எதிர் நோக்கியுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இடம்பெயர்ந்த மக்கள் குறித்து மீண்டும் அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தெரிவிக்கையில்
அரச பாதுகாப்பு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் பேர் அரசாங்கத்தினால் “நலன்புரி கிராமங்கள்” என்று அழைக்கப்படும் முகாம்களுக்குள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
சுயாதீன கண்காணிப்பாளர்கள் சுதந்திரமாக உட்புக முடியாத நிலையில் பலர் பாதுகாப்பின்றியும் காணாமல் போதல், ஆட்கடத்தல், சட்டவிரோத கைது, பாலியல் வல்லுறவு போன்ற ஆபத்துக்களையும் எதிர்கொள்கிறார்கள். முகாமுக்குள் இருப்பவர்கள் உதவிப் பணியாளர்களுடனும் இராணுவத்தினரால் அவ்வப்போது கடும் கண்காணிப்புடன் அனுமதிக்கப்படும் பார்வையாளருடனும் சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரை விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டுமென இராணுவம் வலியுறுத்தி வருவதால் மருத்துவ காரணத்தைத் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் முகாம்வாசிகள் வெளியே செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது.
மே மாத நடுப்பகுதியில் யுத்தம் முடிவடைந்ததிலிருந்து தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 10,000 பேர் சுற்றி வளைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்ட சர்வதேச உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படுவதை கண்காணிக்குமாறும் முகாம்களை சிவில் அதிகாரிகள் நிர்வகிக்கும்படி இலங்கை அரசாங்கத்திடம் கேட்குமாறும் இந்தியாவிடம் கோருகின்றோம்.
புதிதாக் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் உரிய முறையில் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. முகாம்களில் அளவுக்கதிகமானோர் சுகாதார சீர்கேடுகளுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.சில அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் சுகாதாரம், உணவு, நீர், குடும்ப மீள் இணைவு, உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் பெரும் குறைபாடுகள் நிலவி வருகின்றன
No comments:
Post a Comment