இனம், மதம் மட்டுமல்ல எத்தகைய பிளவுக்கும் இனிமேல் இடமில்லை - ஜனாதிபதி பிளவுக்கோ, துண்டாடுவதற்கோ இனி இந்த நாட்டில் இடமில்லை. இனம், மதம் என்ற வகையில் மட்டுமல்ல வேறு எத்தகைய பிளவுக்கும் இந்நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு மறைமாவட்டப் புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
எம்மால் முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழ முடிந்துள்ளது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று உலகம் சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள நவீன முன்னோடியாக எமது நாடு உள்ளதெனவும் தெரிவித்தார். நாம் இந்த நாட்டை புதிய யுகமொன்றை நோக்கி இட்டுச் செல்கிறோம். இனம், மதம் உட்பட சகல பேதங்களுக்கும் அப்பால் இன்று நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. முழுநாடும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் உரையாற்றுகையில் மூன்று தசாப்தங்கள் இந்த நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்த யுத்த சூழல் இருந்தது. இன்றைய புதிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போதெல்லாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எம்மோடு ஒத்துழைத்தார். அது எமக்கு பாரிய பலமாக அமைந்தது. அதேபோன்று மத சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்த நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளிலும் அவர் தெளிவுடன் எமக்குப் பலம் சேர்த்தார். அன்று மடுத்திருப்பதிக்குச் செல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது. மனிதாபிமான நடவடிக்கை மூலம் எமது படையினர் மடுத்தேவாலயத்தைப் பாதுகாக்க முற்பட்டபோது அங்கு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளே இருந்துள்ளன. “வாள் எடுத்தவன் வாளால் மடிவான்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அது போன்ற சமாதான நோக்கத்தைப் போற்றுகின்ற சமயத் தலத்தில் பதுங்கு குழிகளை வைத்திருப்பதென்பது அந்த மதத்திற்கே ஏற்படுத்தும் பாரிய களங்கமாகும்.
இன்று கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதிக்குச் செல்ல சுதந்திரம் கிடைத்துள்ளது. சுதந்திரம் மட்டுமன்றி கௌரவத்துடன் விசுவாசிகள் அங்கு பயணிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மடுமாதாவின் ஆசீர்வாதத்தை கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி முழு தாய்நாட்டிற்கும் பெற்றுக்கொடுத்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இதனால் எதிர்கொள்ளும் பண்டிகை மிகவும் விசேடமானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment