18 August 2009

வெள்ளப் பெருக்கு நிலைமைக்கு ஐ.நா.பொறுப்பல்ல

அகதி முகாமில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளுக்குத் தாம் பொறுப்பல்ல என ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அகதி முகாம்களில் வடிகாலமைப்பு முறைமை பழுதடைந்தமைக்கு ஐ.நா தான் பொறுப்பு என்ற அரசாங்கத்தின் கருத்து உண்மைக்குப் புறம்பானதெனவும் அது தெரிவித்துள்ளது. அகதி முகாம் நிலைமைகளைச் சரியான முறையில் அவதானிப்பது அரசாங்கத்தின் கடமை என ஐக்கிய நாடுகளின்இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் நீல் பூனே குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், அகதி முகாம்களின் வடிகாலமைப்பைச் சீர் செய்வது ஐக்கிய நாடுகளின் கடமையல்ல. அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வகையிலான செயற்பாடுகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடிகாலமைப்புத் திட்டங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளைத் தற்போது மக்களின் நலன்கருதி ஐக்கிய நாடுகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மெனிக் பாம் முகாமின் 4ஆம் வலயத்தில் வடிகாலமைப்புத் திட்டங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

அதேவேளை, அகதி முகாம்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்கான முழுப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மறுவாழ்வு அமைச்சர் ரிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment