18 August 2009

காணிப் பிரச்சினையில் குழப்ப நிலை : இரா.துரைரத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினை வலுவடைந்து வருகிறது. இப்பிரச்சினை மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான இரா.துரைரத்தினம் மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


அதில் மேலும் தெரிவிக்கையில் வாகரை, கிரான் உட்பட சில பிரதேச செயலக பிரிவுகளில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற,வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணி தொடர்பாக ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.


சில காணிகள் திட்டமிட்டு வழங்கப்படுவதால் சிறுபான்மையினரின் பாரம்பரிய பிரதேசம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தமிழர்களின் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடக் கூடிய வாய்ப்புக்களும் தென்படுகின்றன.


காணிப் பிரச்சினை தொடர்பாக,காணி பயன்பாட்டு திட்டமிடல் குழு ,பிரதேசம் ,மாவட்டம் மற்றும் தேசிய ரீதியாக அமைப்பதற்கு அனுமதி இருந்தும் எமது மாகாணத்தில் இது வரை இக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. மாகாண ரீதியாக குழு அமைக்க முடியாது .ஆனால் கிழக்கு மாகாணத்திற்கென காணி பயன்பாட்டு திட்டமிடல் குழுவொன்று அமைக்கப்பட்டே ஆக வேண்டும்.


அது மட்டுமன்றி காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்,காணியை உறுதிப்படுத்தல், பின்னுரிமையாளருக்குக் காணியைப் பெயர் மாற்றம் செய்தல் போன்ற வேலைகள் மாகாண சபை ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.


ஏற்கனவே அனுமதிப் பத்திரமுள்ள வயல் காணிகள் அனைத்திற்கும் நில அளவை வரைபடம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். மாவட்டத்திலுள்ள வாவிக் கரைக்கு ஒதுக்கிய காணி எவ்வளவு என தீர்மானிக்கப்பட வேண்டும்.


கிழக்கு மாகாணத்தில் எந்த காணிகளாக இருந்தாலும் வீடு கட்ட 20 பேர்ச், தொழில் செய்வதற்கு 40 பேர்ச் முதல் ஒரு ஏக்கர் வரை வழங்குவதோடு, நீண்ட கால குத்தகை வரையறை செய்யப்பட்டு பிரதேசம் மற்றும் மாவட்ட வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


இந்நிலையில் எமது மாவட்டத்திலுள்ள காணிகளை வழங்கவதில் ஏற்படப் போகும் பாரிய அழிவுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment