11 August 2009

மீள்குடியேற்றத்திற்காக மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்

திருகோணமலைல, மூதூர் கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த குடும்பங்களில் ஐந்தாவது ஆவது தொகுதியினர் கிளிவெட்டியில் மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலமீன்மடு; - இல-02 நலன்புரி நிலையத்தில் கடந்த மூன்று வருடங்களாகத் தங்கியிருந்த 63 குடும்பங்கைளச் சேர்ந்த 244 பேர் 11 பஸ்களில் வெருகல் ஊடாக அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்தார்.
குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்த 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

இக்குடும்பங்களுக்கான நிரந்தர மாற்றுக் குடியிருப்பு வசதிகளுக்காக சில இடங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இக்குடும்பங்கள் தற்காலிகமாக பட்டித்திடல்,கிளிவெட்டி மற்றும் தில்லான்கேணி ஆகிய இடங்களிலேயே தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தகவல்களின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி, ஆரையம்பதி, ஆதிவைரவர் கோவிலடி முகாம், சத்துருக்கொண்டான் இலக்கம் -02, பாலமீன்மடு 02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 5 கட்டங்களில் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் 218 குடும்பங்களைச் சேர்ந்த 852 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment