ஊழலற்ற சிறந்த சேவைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: புளொட் தலைவர் சித்தார்த்தன்வவுனியா நகரசபைக்குத் தேர்தலின் மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிர்வாகம், ஊழலற்ற சிறந்த சேவை ஆற்றுமானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்" என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வவுனியா நகரசபை தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.
வவுனியா நகரசபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் நிச்சயமாக நாங்கள் வெல்வோம் என்றே எதிர்பார்த்திருந்தோம். ஆனால் தேர்தல் தினத்தன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் எங்களது வெற்றியைப் பறித்தெடுத்து விட்டன. முக்கியமாக எமது வாக்கு வங்கிகள் அமைந்துள்ள பகுதிகளில் அரச கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட தமிழ்க்கட்சிகள் பொலிஸாருடன் வந்து மக்களை மிரட்டி, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டனர்.
இதனால் எமக்குக் கிடைக்க வேண்டிய ஆயிரம் வாக்குகள் கைவிட்டுப் போய்விட்டன. இதுதான் எங்களது தோல்விக்கு முக்கியமான காரணம். தமிழரசுக் கட்சி எம்மைவிட 143 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கின்றனர். எங்களுக்கு கிடைக்கவிருந்த 1000 வாக்குகளும் கிடைத்திருந்தால் நாங்கள் 6 உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது. ஆனால் அந்த ஆதரவு தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் நாங்கள் இதனை ஒரு தோல்வியாகவே கருதவில்லை.
தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தமட்டில் அவர் இந்தத் தேர்தலை நல்லமுறையில் நடத்தியிருக்கின்றார். ஆனால், வாக்குச் சாவடிகளுக்கு வெளியில் சட்டம் ஒழுங்கு சீராகப் பேணப்படாததால்தான் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
வீட்டிலிருந்து வாக்களிப்பதற்காக வெளியில் வந்தவர்கள் கூட தாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால் எமக்கு வாக்களிக்கவிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து நான் பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோதிலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, புலிகளுடன் இனங்காணப்பட்ட ஓர் அமைப்பு. அந்தக் கட்சிக்கு வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் அநேகமானவர்கள் விடுதலைப் புலிகளின் பொங்குதமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களாவர். இன்றும் வடக்கு கிழக்குப் பகுதி மக்களில் ஒரு சாராரிடையே புலிகளுக்கு அனுதாபம் காட்டுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தன. இது தொடர்பான செய்திகள் தமிழ்ப்பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தன.
நிச்சயமாக அந்த ஆதரவினால்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வவுனியாவில் வெற்றி பெறக் கூடியதாக இருந்தது. வவுனியா நகரசபையைப் பொறுத்தமட்டில் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்து, அவர்களுடைய வசதிகளை மேம்படுத்துவதுதான் நகரசபையின் செயற்பாடாக இருக்க வேண்டும்.
எனவே இந்தச் சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சபையின் தலைவரும் உறுப்பினர்களும் நகர மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஓர் ஊழலற்ற, நேர்மையான, செயற்திறன் மிக்க சபையைக் கொண்டு நடத்துவார்கள் என்றால், அவர்களுடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எங்களுடைய முழுமையான ஆதரவு நிச்சயம் உண்டு. அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையான முறையில் இந்நகர மக்களுக்குத் தேவையான சேவைகளை இந்த நகரசபை முன்னெடுத்துச் செயற்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாகும் என்றார்
No comments:
Post a Comment