தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தும் சாத்தியம், சுதந்திர தினத்திற்கு பின் சபை கலைக்கப்படும்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டியதையடுத்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஆறாவது பாராளுமன்றத்தை நாட்டின் 62 ஆவது சுதந்திர தினத்திற்கு பின்னர் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் பெரும்பாலும் பெப்ரவரி 5 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்ககூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த உடனேயே பொதுதேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகியுள்ள அரசாங்கம் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் பொதுதேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆறாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் களமிறங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடவிருக்கின்ற இதர கட்சிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான பெயர் விபரங்களை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தி ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2010 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் அதற்கு பதிலாக கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பித்திருந்தது.
நிதி திட்டமிடல் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்பானது இவ்வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்து விடும் அதற்கு பின்னர் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தேவையான நிதியை வரவுசெலவுத்திட்டத்தின் மூலமாகவே ஒதுக்கிகொள்ளவேண்டும். அவற்றை கருத்திகொண்டே புத்தாணண்டிற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது
வீரகேசரி
No comments:
Post a Comment