06 March 2010

நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், அரசாங்கம் சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று முன் தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். இவரது சுயாதீன விசாரணை கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வருடம், நாடுகளுக்கு இடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மதிக்கவேண்டும் என மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க கோரியுள்ளார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அனைத்துத் தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய வன்முறைகள் தொடர்பாக இலங்கை முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும். இதுபோன்ற நடவடிக்கைக்கு சர்வதேச சமூகம் தன்னாலான உதவிகளை வழங்கும் எனவும் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைச் சபை அமர்வின்போது, தனது கடந்த வருட அறிக்கையினைச் சமர்ப்பித்து உரை நிகழ்த்திய நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 வருடகாலப் போர் முடிவுக்குவந்த பின்னர், அனைத்துத் தரப்புகளும் புரிந்ததாகச் சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளித்தோன்றியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றாக மறுத்திருந்தது. கடந்த வருடம், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை முயற்சித்த போதும், ஏனைய நாடுகளின் உதவியுடன் தனது யோசனையை நிறைவேற்றி அந்த முனைப்பை அரசாங்கம் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே மாதிரியான கோரிக்கைகளை நவநீதம்பிள்ளை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பொதுமக்களின் மரணம் தொடர்பான போர்க்குற்றங்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்வைப்பாரா? ஏன அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வியட்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்காவின் செயற்பாடுகள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருவாரா எனவும் அரசியல் அவதானிகள் கேட்கின்றனர்.

No comments:

Post a Comment