ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: 17,000 விமானங்களின் போக்குவரத்து ரத்து ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சாம்பல் பரவியதால், ஐரோப்பா கண்டத்தில் 3ஆவது நாளாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 17,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐஸ்லாந்து நாட்டில் பனிமலையின் அடியில் உள்ள ஓர் எரிமலை, இந்த மாதத்தில் 2ஆவது முறையாக, வெடித்தது. இதனால் 'லாவா” எனப்படும் எரிமலை குழம்பு வெளியேறியது. பனிமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகித் தண்ணீர் வழிந்தோடியது. இதனால், கீழ்ப்பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும், எரிமலை குழம்பால் புகையுடன் சாம்பல் பீறிட்டுக் கிளம்பியது. வானத்தில் பல மைல் உச்சிக்கு கருப்பு நிற சாம்பல் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 6,000 - 11,000 மீட்டர் உச்சிக்கு சாம்பல் பறந்தது. அத்துடன், வடக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கும் சாம்பல் பரவி, வான்பகுதியை அடைத்துக் கொண்டது.
இந்த சாம்பல், விமானங்களின் என்ஜினில் ஊடுருவி, விமானத்தை செயல் இழக்கச் செய்யக் கூடியவை. மேலும், கருப்பு சாம்பலாக இருப்பதால், விமானிகளால் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, ஐரோப்பா கண்டத்தில்; விமான போக்குவரத்து பாதிப்பு 3ஆவது நாளாக நீடிக்கிறது. லண்டனில் உள்ள பிரபல ஹீத்ரு விமான நிலையம், தினமும் 1,200 விமானங்களை கையாளக்கூடியது. ஆனால், சாம்பல் காரணமாக, அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால், 1 லட்சத்து 80 ஆயிரம் பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். இங்கிலாந்தின் மற்ற முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், 1 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டில் உள்ள 24 விமான நிலையங்களும் அயர்லாந்து, டென்மார்க், நோர்வே சுவீடன், பின்லாந்து, போலந்து, லிதுவேனியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டன.
இந்தியாவில் இருந்து லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஏயார் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர்ஸ் ஆகியவற்றின் விமானங்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டன.
ஐரோப்பா வழியாக அமெரிக்கா, கனடா செல்லும் விமானங்களும் நிறுத்தப்பட்டன. ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் விமான நிலையம் மூடப்பட்டது. அமெரிக்கா-இங்கிலாந்து இடையே நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் சுமார் 17 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment