16 April 2010

புதிய தேர்தல் முறைமை : சுசில் பிரேம்ஜயந்த

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். அவர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில்

பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, நாட்டு மக்களிடம் கடந்த பொதுத் தேர்தலில் பலமான நாடாளுமன்றத்தைக் கோரியிருந்தது. மக்கள் அதனைப் புரிந்துகொண்டு எமக்கு பெரும்பான்மை பலத்தைக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கம் முன்வைத்த விடயங்களில் பிரதான விடயமாக தேர்தல் முறைமை மாற்றத்தைக் குறிப்பிடலாம். தற்போதைய தேர்தல் முறைமையை மாற்றவேண்டும் என்றும் அதற்கு ஆணை வழங்குமாறும் கோரினோம்.

இந்நிலையில் அரசியலமைப்பு மாற்றம் என்ற விடயதானத்துடனேயே இந்த தேர்தல் முறைமை மாற்றத்துக்கும் நாங்கள் செல்ல வேண்டியுள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் குறித்து ஆராய்வதற்குக் கடந்த நாடாளுமன்றத்தில், முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் ஏற்கனவே நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்த தெரிவுக்குழு ஓர் இடைக்கால அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. எனவே குறித்த இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே எமது அரசாங்கம் புதிய தேர்தல் முறைமையைத் தயாரிக்க எதிர்பார்க்கின்றது. இந்த விடயத்தில் நாங்கள் எதிர்க்கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என்றார்

No comments:

Post a Comment