01 September 2009

தமிழ்-முஸ்லிம் பிரச்சினை தீர குழு நியமனம்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திலுள்ள மதுரங்கேணியில் காணி தொடர்பாகத் தமிழ் - முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குப் பொருத்தமான தீர்வொன்றைக் காண அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவொன்றை கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமித்துள்ளார். முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் வாகரைப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

காணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முதலமைச்சர் நடத்திய இக்கூட்டத்தில் அமைச்சர் அமீர்அலி, மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம், ஜவாகர் சாலி, அ.சசீதரன், எம்.மாசிலாமணி மற்றும் யு.எல்.எம். முபீன், பதில் அரசாங்க அதிபர் ரூபா கேதீஸ்வரன், வாகரை பிரதேச சபைத் தலைவர் எம்.கணேசன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

காணிகளுக்கு உரிமை கோரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகளும் குடியிருப்பாளர்களும் உரிய ஆவணங்களுடன் சமூகமளித்திருந்தனர். 1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கு வாழ்ந்து வந்த முஸ்லிம்கள், இன வன்முறை காரணமாகவே தாம் வெளியேற்றப்பட்டதாகத் தம் பக்க நியாயத்தை இக்கூட்டத்தில் முன் வைத்தனர்.

ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் தரப்போ 1986ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை அப்பிரதேசத்தில் தாங்களே பூர்வீகக் குடிகளாக இருந்து வருவதாக தம் பக்க நியாயத்தை முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது. நியமிக்கப்பட்ட குழு, இரண்டு வார காலத்திற்குள் இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment