02 November 2009

முகாம்களில் இருந்த 1,19,000 பேர் சொந்த இடங்களுக்கு

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 1,19,000 பேர் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மேலும் 1,61,000 பேரே தற்போது நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள னரெனத் தெரிவித்த அவர், இவர்களை துரிதமாக மீள்குடியமர்த்தும் வகையில் தினமும் 3,000ற்கு மேற்பட்டவர்களை இவ்வாறு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். இதன்படி இந்த வாரத்தில் தினமும் 3,000ற்கும் 3,500ற்கும் மேற்பட்டவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- குறுகிய காலத்தில் 1,19,000 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு மீள அனுப்பிவைக்க முடிந்துள்ளது. அத்துடன் மழைக்காலம் வந்தால் அதனால் பாதிக்கப்படக்கூடிய 65,000 பேரை வேறு இடங்களில் தங்கவைப்பத ற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இடர் முகாமைத்துவப் பிரிவும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அனுப்பப்பட்டுவிட்டதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அத்துடன் நலன்புரி நிலையப் பிரதேசங்களின் வடிகால் அமைப்புகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளதுடன், கூடாரங்கள், மலசலகூடங்கள் சகலதும் மழையினால் பாதிக்காத வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா வடக்கு, வவுனியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீள்குடியமர்வுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இளமருதம் குளம், கள்ளிக்குளம், பூவரசம் குளம், கல்மடு, புளியங் குளம், கனகராயம் குளம் உள்ளிட்ட கிராமங்கள் இதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரத்தில் இங்கு மீள்குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment