01 November 2009

ஆசிய ஜோதி அன்னை இந்திரா
நினைவுதினம்

இந்தியாவின் மிகப் பெரும் சொத்து என்று வர்ணிக்கப்படுபவர் அன்னை இந்திரா ஆவார்.

இந்திராவின் ஆளுமைத்திறன் இந்திய தேசத்தை உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக மிளிரச் செய்தது. எனவேதான் இந்தியாவே இந்திரா, இந்தியாவே இந்தியா என்று கவிஞர்கள் இந்தியாவையும் இந்திராவையும் வேறுபடுத்தாது ஒருமித்து நோக்குகின்றனர்.

இந்திரா 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி ஜவஹர்லால் நேருவுக்கும், கமலா நேருவுக்கும் மகளாக அவதரித்தார். இந்திராவிற்கு ஜவஹர்லால் நேரு வைத்த பெயர் பிரியதர்சினி என்ற போதும் இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு தன் தாயாரின் நினைவாக இந்திரா என்று பெயரிட்டு மகிழந்தார்.

வயதிலேயே விடுதலை வேட்கையில் கவரப்பெற்ற அன்னை இந்திரா பிரான்ஸ் நாட்டு விடுதலை வீராங்கனையான ‘ஜோன் ஒப் ஆர்க்’ காக தன்னை உருவகித்து செயற்படலானார்.
அண்ணல் காந்தியின் அரவணைப்பில் வளர்ந்த அன்னை இந்திரா உலகம் வியக்கும் வண்ணம் அரசியல் வானில் மின்னி மறைந்த ஒரு தாரைகையாக விமர்சிக்கப்படுகின்றார். இந்திராவின் துணிவையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்த பிரித்தானியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘இந்திரா கூரிய நகங்களைக் கொண்ட ஒரு புறா’ என்று மெச்சுகின்றார்.

1946 மார்ச் 26ம் திகதி இந்திரா, பெரோஸ் காந்தியை மணந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு பலமுறை சிறை செல்ல நேர்ந்ததைப் போலவே இந்திராவும் பெரோஸ் காந்தியும் சிறைச்செல்ல நேர்ந்தது. இந்திராகாந்தி தீவிரவாதி என்ற கருத்துடன் நோக்கப்பட்டதால் சாதாரண சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அவருக்கு மறுக்கப்பட்டன. இந்திரா தனது சிறை வாழ்க்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே நான் பலமுறை சிறைக்கு சென்று என் தந்தை உள்ளிட்ட பல உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்திருக்கின்றேன். அதனால் சிறைத்தண்டனை என்பது எனக்கு பயத்தைக் கொடுக்கவில்லை என்றார்.

1944இல் ராஜீவ்காந்தியும், 1946 இல் சஞ்சய்காந்தியும் பெரோஸ்-இந்திரா தம்பதியினரின் மகன்மார்களாக அவதரித்தனர். 1935இல் இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து கொண்ட இந்திரா 1959இல் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரா, சாஸ்திரியின் மறைவின் பின் 1966இல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இந்தியா சகல துறைகளிலும் மேம்பட்டு விளங்க தன்னை அர்ப்பணித்து நல்லாட்சி புரிந்த இந்திரா 1983இல் 101 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உச்சியில் நிலைபெற்ற இந்திரா 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி தனது மெய்பாதுகாப்புகாவலர் சீக்கியரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். ஆசிய ஜோதி அணைந்தது. இறப்பிற்கு முதல்நாள் ஒரிசாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்திரா உரையாற்றுகையில் தேசத்துக்கு சேவை புரியும் போது நான் இறக்க நேரிட்டாலும்கூட அதுபற்றி நான் பெருமையடைவேன். எனது ஒவ்வொரு துளி இரத்தமும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்துக்கும் அதன் பலத்துக்கும் பங்களிக்கும் உறுதியாக நம்புகின்றேன் என்றார். அன்னை இந்திராவின் தேகம் அழிந்தாலும் அன்னை காட்டிய வழியில் இந்தியா இன்றும் வல்லரசு நோக்கி வீறு நடை போடுகின்றது.
துரைசாமி நடராஜா

No comments:

Post a Comment