01 November 2009

அழுவதுதான் அவமானம், அவதிப்படுவது அவமானமல்ல.-யஹியா வாஸித்

நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு, இறுதியில், இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு குட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள், இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம் வன்னி முகாம் வேதனை பற்றி வருத்தப்படுகின்றார்கள். அடியேய் பொண்டாட்டி எனக்கு 15 நாளில் பிள்ளை பெற்றுத்தருவாயா என என்ட பொண்டாட்டியிடம் கேட்டேன். இந்தாளுக்கென்ன லுசோ. பிள்ளை பெற பத்துமாதம் எடுக்கும் புருஷனாரே என்றாள். அதற்கு ஏதாவது மெஷினுகள் இல்லையாடி எனக்கேட்டேன். அடமுட்டாளே அது நியதி. டார்வின் தத்துவம் அல்லது இறைவனின் ஆக்கல் தத்துவம் என்றாள். போனமாதம் எனது 5 வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச்சென்று, என்பிள்ளை உடனடியாக ஓஎல் எக்ஸாம் எடுக்க வேண்டும் என்றேன். பாடசாலைப் பொறுப்பாளர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அண்ணே உங்கள் பிள்ளையை திடீரென 10ம் வகுப்பில் கொண்டு போய் இருத்த முடியாது. ஒவ்வொரு வகுப்பாக முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்றார். நேற்று விவசாயத் திணைக்கள அதிகாரியைச் சந்தித்து, நாளைக்கு என் வயலில் நெல் விதைக்கப் போகின்றேன். நாளை மறுதினம் அறுவடை செய்யலாம்தானே என்றேன். அவர் என்ர அடுத்த வீட்டுக்காறனுக்கு போன் பண்ணி, இந்தாளுக்கு மண்டை களண்டுட்டுது பக்கத்து வீட்டுக்காறர்களெல்லாம் கவனமாக இருங்கோ எனக்கூறியுள்ளார். ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை நாளைக்கே குடியேற்று, குடியேற்ற வேண்டும், குடியேற்றாவிட்டால் மீண்டும் தொடங்கும் 5ம் கட்டப் போராட்டம் என எச்சரிக்கை விடுகின்றனர் கொலை செய்யும் மனிதர்கள். உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம், பேசுவதற்குச் சுதந்திரம் என சகல சௌபாக்கியங்களுடனும் இருந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளனர் புலன் பெயர் புண்ணியவான்கள். இது புது வியாபாரம். மங்கையர்க்கரசியக்கா சிங்களனின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என 1971 ல் தொடங்கி வைத்த வியாபாரம், காசியண்ணா, ஈழவேந்தன் அண்ணா, என கொஞ்சகாலம் தொய்யோ தொய்யென தொங்கி செய்த தொப்பி வியாபாரம், ஈபிஆர்எல்எப், ரெலோ, புளட், ஈரோஸ் என 1977 முதல் 1987 வரை கும்மியடித்து, கூப்பாடு போட்டு, போஸ்ர் ஒட்டி வடம் பிடித்த வியாபாரம், பின்னர் கட் அன்ட் ரைட்டானவர்கள் என சொல்லிக் கொண்டு வந்து ஆளையாள் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று, இருவரையும் அடுத்த வீட்டுக்காறன் கொன்று, எல்லோரையும் ஒருவர் கொன்று, ஒரு இயக்கம் கொன்று, அவர், அந்த நபர் தான்தோன்றி, அவருக்கு ஆரத்தி எடுத்து, அபிஷேகம் செய்து, குல்லி சூல் ஆடி (இது தமிழ் பேசும் முஸ்லீம்கள் பாவிக்கும் வார்த்தை. இதன் அர்த்தம். நான்தான், இனி நான்தான், இனி எல்லாமே நான்தான் என்ற ஒரு மஸ்து நிலையில் கூறும் சொல்) அடம்பிடித்து, ஆர்ப்பரித்து, கட்டுநாயக்கா, அனுராதபுரம். ஆணையிறவு என சிங்களத்தை கொன்று, எங்களுக்கு புள்ளிவிபரங்கள் சொல்லி, புலம் பெயர் நாடெல்லாம் ரொக்கட் லோஞ்சருக்கு, பைபர்கிளாஸ் போட்டுக்கு, ஏகே 47க்கு என பணம் குவித்து, வியாபாரத்தை பெருக்கோ பெருக்கென பெருக்கி, இப்போ மார்கட்டில் விற்பதற்கு எதுவும் இல்லாமல், 3 லட்சம் வன்னிப் புனிதர்களை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ள ஏல வியாபாரம்.

No comments:

Post a Comment