28 November 2009

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இன்னொரு சந்தர்ப்பம்

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இனப் பிரச்சினை பற்றிய பேச்சு எழுவது வழமை. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தேர்தலின்போதும் பேச்சு எழுந்தபோதிலும் இனப் பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இனப்பிரச்சினையின் தீர்வுக்காக அறுபது வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்ட ‘போராட்டம்’ எந்தப் பலனையும் அளிக்கவில்லை. சில தலைவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்காக மாத்திரம் இனப் பிரச்சினையைக் கையாண்டார்களா என்ற சந்தேகத் துக்கு இது இடமளிக்கின்றது.

எவ்வாறாயினும், பிரச்சினையின் தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாமலில்லை. ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போனதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறுகின்றபோதிலும் அதற்கான பிரதான பொறுப்பு தமிழ்த் தலைவர்களைச் சார்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றிருந்தவர்கள் மேற்கொண்ட இரண்டு நிலைப்பாடுகள் இனப் பிரச்சினைக்கான தீர்வு தள்ளிப் போவதற்குக் காரணமாகின. கிடைக்கும் தீர்விலும் பார்க்க மேலான தீர்வொன்றை வலியுறுத்தியது ஒரு நிலைப்பாடு. ஐக்கிய தேசியக் கட்சியுடனான இணக்க உறவு இன்னொரு நிலைப்பாடு.

இனப் பிரச்சினையை மையமாக கொண்டு பல போராட்டங்களை நடத்திய தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. வாக்குறுதி அளித்தபடி மாவட்ட சபைகளை வழங்குவது சாத்தியமில்லை என்று டட்லி சேனநாயக்கா அறிவித்த பின்னரும் தமிழரசுக் கட்சி அவரது அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்தது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யாத போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக ஆதரித்தது.

மேலான தீர்வை வலியுறுத்திக் கிடைக்கும் தீர்வை நிராகரித்ததற்கு மாகாண சபையையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் உதாரணமாகக் கூறலாம். விசேடமாக, பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் மேலான அதிகாரங்களைக் கொண்டுள்ள போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி அதை எதிர்த்தது.

தமிழ்த் தலைவர்கள் இவ்வாறான நிலைப்பாடுகளை மேற்கொண்டதன் விளைவாக இனப் பிரச்சினையின் தீர்வு பின்தள்ளப்பட்டது மாத்திரமன்றி, தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கும் உள்ளாக நேர்ந்தது. இத்தலைவர்கள் இப்போது நிதானமாகச் சிந்தித்துப் பார்பார்களேயானால் தங்கள் தவறுகளை நிச்சயம் ஏற்றுக்கொள்வர்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்கான இன்னொரு சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளன. இவ்விரு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே வெற்றியீட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 13வது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வை நடைமுறைப்படுத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இத்தீர்வை முதலில் ஏற்றுக்கொண்டு முழுமையான தீர்வைப் படிப்படியாகப் பெற முடியும்.

முன்னர் விட்ட தவறைத் தமிழ்த் தலைவர்கள் இப்போது விடக்கூடாது. கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தி லும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடைமுறைப்படுத்து வதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெறுவதற்குத் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பும் தேவை. இது இனப்பிரச்சினையின் தீர்வுக்கான பங்களிப்பு.

தினகரன்

No comments:

Post a Comment