26 November 2009

பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சியை இரட்டிப்பாக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி


இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்துக்கெதிரான தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, பயங்கரவாதத்துக்கெதிரான கூட்டுறவு முயற்சி ஒன்றைத் துவங்கவும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தப்பின்னர், இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த புதிய கூட்டுறவு முயற்சி, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதை விஸ்தரிப்பது, தகவல் பரிமாற்றம் மற்றும் திறனைக் கட்டியமைப்பது போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி கவலை தெரிவித்த இந்த இரு தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பைத் தரும் புகலிடங்கள் மற்றும் பதுங்குமிடங்கள் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூறினர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரும் புகலிடங்களை அழிப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறை இருப்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பற்றிய, வழமை சாராத பிற துறைகளான, அமைதிக்காக்கும் பணி, மனித நேய மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்பகுதிபாதுகாப்பு மற்றும் கடல்வழிப்பாதைகளில் தொடர்பை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் பரஸ்பர சாதகத்துக்கான பாதுகாப்புக் கூட்டுறவு தற்போது நடத்தப்படும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளூடாகவே மேற்கொள்ளப்படும் என்று இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.

நன்றி- பி.பி.சி

No comments:

Post a Comment