12 December 2009


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், ஜனநாயகம் என்ற போர்வையில் பிற்போக்கு சக்திகள் ஒன்றுபட்டுள்ளன -டியூ குணசேகர

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகம் என்பதன் பெயரில் உள்நாட்டு பிற்போக்கு சக்திகளும் சர்வதேச பிற்போக்கு சக்திகளும் ஒன்றுபட்டுள்ளன. ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதே இவர்களின் உண்மையான நோக்கம். இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டி.யூ. குணசேகர செய்தியாளர்கள் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

யுத்தம் முடிவடைய இருந்த இறுதி வாரத்தில் அதை நிறுத்துமாறு வலியுறுத்தி வந்த சர்வதேச அழுத்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட சகல அரச தலைவர்களும் யுத்தத்தைச் நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தனர். வெளிநாட்டுப் படைகளையும் ஐ.நா. சமாதானப் படைகளையும் அனுப்புவதாக யோசனைகளையும் முன்வைத்தனர். எனினும் ஜனாதிபதி அதற்கு இடமளிக்கவில்லை.

சீனா,ரஷ்யா,இந்தியா,பாகிஸ்தான்,ஈரான், தென்னாபிரிக்கா,வியட்நாம் உள்ளிட்ட 3 ஆம் உலக நாடுகள் எமக்கு ஆதரவளித்தனவே தவிர,மேற்குலக நாடுகள் எமக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அழுத்தங்களை வழங்கி நடவடிக்கையை தடுத்து நிறுத்தவே அவர்கள் முயற்சித்தனர்.

அது மட்டுமல்லாது யுத்தம் முடிந்த பின்னர் ஒரு இலட்சம் படையினரைப் புதிதாக இராணுவத்துக்குச் சேர்க்க வேண்டும் என்றும் முப்படைகளுக்கும் கட்டளையிடும் அதிகாரம் தனக்கு தேவையென்றும் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கேட்டிருந்தார். யுத்தம் முடிந்த பின்னர் எதற்காக ஒரு இலட்சம் புதிய படையினர். அது மட்டுமல்லாது முப்படைத் தளபதியாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை அவர் கேட்டிருக்கிறார்.

இதேநேரம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால், சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அவருக்கு அந்த அதிகாரம் முதலில் கிடைக்கும். அப்போது அவர் முப்படைகளின் தளபதி. எனவே, அரசாங்கம், பாராளுமன்றம் அமைச்சரவை இல்லாதவொரு ஆட்சியைக் கொண்டு போக முடியும். 40 வருடம் இராணுவத்தில் இருந்த ஒருவரது இவ்வாறானதொரு ஆட்சியை நினைத்துப் பார்த்தால் அதன் பாரதூரம் புரியும்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முதற் தடவையாக சர்வதேச அழுத்தத்தின் பேரில் வேட்பு மனுவொன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது வாஷிங்டனின் ஒத்துழைப்புடனான நியமனம். ஜெனரல் பொன்சேகாவை நியமித்து அரசியல்

இராணுவமயமாக்கப்பட்டுள்ளதுடன், இராணுவம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமானது. இதற்கான பொறுப்பை ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யுமே ஏற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment