12 December 2009

அரசியல் தீர்வுப் பயணத்தில் பங்காளிகளாக வேண்டும்


அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை ஜனாதிபதித் தேர்தலையடுத்து உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று இலங்கைத் தூதுக்குழுவொன்று இந்தியாவுக்கு உறுதியளித்திருக்கின்றது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய தூதுக்குழு இந்திய அதிகாரிகளுடனும் வெளிவிவகார அமைச்சருடனும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதிமொழியை அளித்திருக்கின்றது.

இனப்பிரச்சினை அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்வின்றி இழுபடுகின்றது. இப் பிரச்சினை காரணமாகத் தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகியிருக் கின்றார்கள். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

அறுபது வருட காலமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய வாக்குறுதி தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட போதிலும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. எங்கே தவறு நேர்ந்திருக்கின்றது என்பது பற்றித் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

சிங்களத் தலைவர்களே தீர்வுக்குத் தடையானவர்கள் என்றும் அவர்களிடமிருந்து அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்றும் சொல்லப்படும் காரணத்தை தமிழ் மக்கள் நீண்ட காலமாகக் கேட்டு அலுத்துப் போய் விட்டார்கள்.

ஆக்கபூர்வமான அணுகுமுறையைத் தமிழ்த் தலைவர்கள் பின்பற்றியிருந்தால் தீர்வை நோக்கிய பயணத்தில் இதுவரை கணிசமான அளவு முன்னேறியிருக்கலாம். இப்போது பழையதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன என்ற சிந்தனையே இப்போது முக்கியமானது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் சார்பிலேயே இலங்கை தூதுக் குழு அரசியல் தீர்வு பற்றிய வாக்குறுதியை இந்தியாவுக்கு அளித்திருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கைவசம் தீர்வொன்று இருக்கின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையே இத்தீர்வு. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள ஆலோசனைகள் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்க மேலானவை. கூடுதலான அதிகாரங்களைக் கொண்டவை.

இவ்வாலோசனைகள் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் இவ்வாலோசனைகள் அரசியல் தீர்வின் ஆரம்பம் என்பதை மறுக்க முடியாது.

இதை ஆரம்பமாக ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்கான முயற்சியை மேற் கொள்வதற்கு எவ்விதத் தடையும் இருக்கப் போவதில்லை. முழுமையான அரசியல் தீர்வை உடனடியாக அடையக்கூடிய புறவய சூழ்நிலை இப்போது இல்லை என்பதையும் கடந்த காலங்களில் யதார்த்தத்துக்கு மாறாக உயர்வான தீர்வை வலியுறுத்தியதாலேயே பிரச்சினை இன்றுவரை தீர்வின்றி இழுபடுகின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

தீர்வுத் திட்டம் எதுவும் கைவசம் இல்லாமல் வெறும் வாக்குறுதி வழங்கும் எதிரணி வேட்பாளரை விட கைவசம் தீர்வொன்றை வைத்திருப்பவரும் தமிழ் மக்கள் தொடர் பான விடயங்களில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதே பொருத்தமானது.

தமிழ் மக்கள் கடந்த காலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அரசியல் தீர்வுப் பயணத்தை ஆரம்பிப்பதில் பங்காளிகளாக வேண்டும்.

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment