15 March 2011

வன்முறை ஒழிந்த சுதந்திரமும், சமத்துவமும், சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்பட வேண்டும்

- ஸ்ரீதரன் பொதுச்செயலாளர், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்



தோழர் புஸ்பராஜா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55வது வயதில் 10-03-2006 இல் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். தனது மரணத்தின் நான் முன் கூட்டியே சில நாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. வெடிமருந்து வீச்சம் இல்லாத தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.

மாணவர் இளைஞர் பேரவையினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த புஸ்பராசாவும் அவரின் சகோதரி புஸ்பராணியும் 1970 களின் முற்பகுதியில் வதை முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதை செய்தல், கொலை செய்தல் ஆரம்பமான காலம் இது. சிங்கள இளைஞர்கள்மீது சமகாலத்திலேயே சித்திரவதைகள் ஆரம்பித்திருந்தன. ஆரம்பத்தில் அஹிம்சை சத்தியாக்கிரக இயக்கங்களில் பங்குபற்றிய, முன்நின்று நடத்திய புஸ்பராசா அன்றைய ஈழத தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பின்னர் 1970 களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர்களில் (தற்போதைய ரெலோ அல்ல) புஸ்பராசாவும் ஒருவர். தோழர் வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் இவரின் சகபாடிகளாக இருந்தனர்.
1974 தமிழாராய்ச்சி படுகொலைகளின் பின்னர் தீவிர செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.

அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் அன்றைய தமிழ் அரசியலின் போதாமை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியிருந்தது.
1980 களின் முற்பகுதியில் அவர் பிரான்சுக்கு புலம் பெயர்ந்து சென்றார்.

அதே காலப்பகுதியில் பிரான்ஸ் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஸ்பராசாவும், நானும், குன்சியும் ஒரு மத்தியானம் கீரிமலையிலிருந்து புறப்பட்டு மாலை வேதாரணியம் கடற்கரையில் இறங்கினோம்.

இரவு வேதாரணியம் சவுக்கந்தோப்பொன்றில் தங்கிவிட்டு மறுநாள் காலை தஞ்சாவூரில் தோழர் புஸ்பராசாவுக்கு அறிமுகமான தந்தை பெரியாரின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட குடும்பம் ஒன்றுடன் தங்கியிருந்துவிட்டு சென்னை சூளைமேடு வஹாப் தெருவிற்கு வந்து சேர்ந்தோம்.


இலங்கை அரச பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தியா வந்திருந்த சில இளைஞர்களும் அங்கிருந்தார்கள்.
தோழர் பத்மநாபா எவிடன்ஸ் (The Evidence) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புஸ்பராசாவும் புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பு பற்றிய பந்திகளை காண்பித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவர் பிரான்ஸ் சென்றுவிட்டார்.

நீண்டகாலம் அவரை ஒரு தேசியவாதியாக அறிந்திருக்கிறேன். 1980 களின் முற்பகுதியில் அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் நெருங்கிச் செயற்பட்டார். பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரி வந்த பலருக்கு அவர் உதவியிருக்கிறார்.
காலஞ்சென்ற தோழர் உமாகாந்தன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் போன்றவர்களுடன் அவர் நெருக்கமாகச் செயற்பட்டிருக்கிறார்.

1980களில் அவர் பிரதானமாக தேசிய விடுதலையுடன், தீண்டாமை, பெண் அடிமைத்தனம், விளிம்புநிலை மக்கள் தொடர்பான அக்கறைகளும் அவரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துக்கொண்டன.

கட்டுரை, கவிதை, என அவர் பல ஆக்கங்களை எழுதியிருப்பதாக அறிகிறேன். ஒருசிலவற்றை அவ்வப்போது வாசித்தும் இருக்கிறேன்.
அவரது குடும்ப சூழலில் அவரது மனைவியார் மீரா, சகோதரி புஸ்பராணி ஆகியோரின் பங்களிப்பும் உறுதுணையும் அனுபவமும் முக்கியமானவை என அறிகிறேன்.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பிய, வட அமெரிக்க புலம் பெயர் தளத்தில் நிகழ்ந்து வந்த இலக்கிய சந்திப்பு, பெண்கள் சந்திப்பு எழுத்துக்கள் பரிமாறல்கள் அவர் மேல் செல்வாக்கு செலுத்தியுள்ளன.
தவிர தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் அடிக்கடி சென்று சமூக இலக்கிய பிரக்ஞை உள்ள மனிதர்களுடன் அவர் தன்னை பரிச்சயப்படுத்தியிருக்கிறார்.

அவர் வெடிமருந்து வீச்சம் இல்லாத தெருக்களை வேண்டினார். ஆனால் அவர் நேசித்திருக்கக்கூடிய அவரது ஊர் மயிலிட்டி இன்னும் உயர் பாதுகாப்பு வலயமே. சொந்தக் கிராமம் அதன் வாழ்வும், வளமும் அழிக்கப்பட்டு விட்டது என்ற வலி இருக்கிறதே அது பயங்கரமானது.

எமது சமூகத்தில் பலரது அனுபவம் போலவே அவரும் உற்ற, சுற்றம் உறவுகளை இழந்திருக்கிறார்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற அவரது அனுபவ தொகுப்பு ஈழத்திலும், தமிழகத்திலும் புலம்பெயர் தளத்திலும் நன்கு அறியப்பட்டது.

இப்போது அரரது ஆக்கங்கள் சிலவற்றை பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியப்படுகிறது.

தமிழ் தேசிய சமூக இயக்க வரலாற்றில் தோழர் புஸ்பராஸா அவர்களுக்கும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. அவரின் கனவான வன்முறை ஒழிந்த சுதந்திரமும், சமத்துவமும், சமாதானமும் நிலவும் வாழ்வு மெய்ப்பட வேண்டும்

தி. ஸ்ரீதரன்
(தோழர் சுகு)

No comments:

Post a Comment