வட மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சாரதிகள், சுகதார தொழிலாளர்கள், மற்றும் வேலைத்தள ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான தீர்மானமொன்று வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிவந்துள்ள மேற்படி ஊழியர்கள் இக்கட்டான சூழ்நிலைகளான டெங்கு நோய் தாக்கத்தின் போதும், இடப்பெயர்வின் போதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை.
அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஆட்சேர்ப்பு சுற்று நிருபத்தின் பிரகாரம் ஆகக்குறைந்த கல்வித் தகைமையாக க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு திறமை சித்தி உட்பட ஆறுபாடங்களில் சித்தியெய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்க்கும் போது தரம் எட்டு சித்தியெய்திருந்தால் போதுமென கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. எனினும் 2013ம் அண்டு ஏனைய மாகாணங்களில் ஆட்சேர்ப்பில் தரம் எட்டு கல்வித் தகைமையுடன் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனவே நீண்டகாலம் வேலை செய்த இவர்களை நிரந்தரமாக்குவதற்கு நாட்டின் ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இனி வருங்காலங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்றலாம் எனவும் மாகாணசபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் வழங்கப்பட்ட சாரதிகள் நியமனங்களில் அநீதி இழைக்கப்பட்டிருப்பதுடன் ஏற்கனவே வேலை செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது புதியவர்களை மாவட்ட வெட்டுப்புள்ளி அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களில் பலருக்கு போதுமான வாகனம் செலுத்தும் அனுபவம் இல்லாதவர்களும் உள்ளடங்குகின்ற்னர். இவர்களுக்கு அம்புலன்ஸ் வாகனம் செலுத்துவதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண பொது நிர்வாக செயலகத்தால் அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளாக பணியாற்றியவர்களுக்கு ஆகக்குறைந்த புள்ளியான 40 வீதத்தை பெற்றவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment