இலங்கை வடபகுதி மீனவர்களின் உறுதியான நிலைப்பாடும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களினதும், தமிழக மீனவர்களின் தளர்வு போக்குகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிப்பது முற்றாக நிற்கும் பட்சத்தில் 95 பில்லியன் ரூபாவை வருமான பெற முடியும் என கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனரத்ன இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கு மிகவும் சாதகமாக அமைந்ததாகவும், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் இலங்கையில் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை தமிழக முதலவர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார். மீனவர் விவகாரத்தில் அவரிடம் ஏற்பட்ட இந்த தளர்வு இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
தமிழக ஊடகங்களும் இலங்கை தரப்பு நியாயத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. இந்த மனமாற்றம் எதிர்காலத்தில் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இதுவதை 87 மீனவர்கள் 17 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் அவ்வாறு இந்தியாவில் கைதாகவில்லை. எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்னர் ஒரு மாத காலத்திற்கு இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் இருப்பதற்கு இணங்கியுள்ளனர். அவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தால் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது முற்றுப்பெறும் என தான் நம்புகிறோம்.
அதேபோல் இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் சட்ட விரோதமாக நுழைந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இலங்கை கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடித்து வருவதால் தங்களுக்கு குறிப்பிட்ட காலம் மீன்பிடிப்பதற்கு அவகாசம் வழங்குமாறு தமிழக மீனவர் தரப்பில் கோரப்பட்டன. தமிழக முதல்வரும் இந்த விடயத்தில் தமிழக தரப்பு மீனவர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். இருந்த போதும் வட பகுதி மீனவர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்தனர்.
யுத்தத்திற்கு முன்னர் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 43 வீதம் வட பகுதியிலிருந்து கிடைத்தது. பின்னர் அது 7 வீதமாக குறைவடைந்தது. தற்போது மீன் உற்பத்தி 18 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் ஹெட்டியாராச்சி, யாழ், திருமலை, புத்தளம் மீனவ சம்மேளனத் தலைவர்கள் எஸ். போன்னம்பலம், செந்தில்நாதன், கமிலஸ் பெரேரா ஆகியோர்களும், தேசிய மீனவர் சம்மேளனப் பணிப்பாளர் சதாசிவம், இலங்கை-இந்திய மீனவர் சங்க அமைப்பின் இலங்கை ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment