வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும், இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து வவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த பேரணி மன்னார்-வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை வந்தடைந்தது.
'சிதைக்காதே சிதைக்காதே” இன உறவை, இந்திய வீடமைப்பு திட்டத்தை தந்த இந்தியாவுக்கு நன்றிகள், “அழிக்காதே அழிக்காதே ஒற்றுமையினை அழிக்காதே”, தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏன் எமக்கு கிடைத்த வீட்டை இல்லாமல் ஆக்குகின்றாய், இந்திய அரசே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய் பிரசாரத்துக்கு செவி சாய்க்காதே, இலங்கை ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதியில் இருந்து எம்மை பாதுகாருங்கள், “ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்” எமது சமூகங்களின் பாதுகாப்புக்கு போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
கச்சேரிக்கு முன்பாக நீண்ட நேரம் தரித்து நின்ற ஆரப்பாட்டக்காரர்கள்,கச்சேரிக்குள் செல்வதற்காக சுற்றுவட்டத்தை அடைந்த போதும், பொலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்திய உயர் ஸ்தானிகர், ஊடகம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குரஷித்,இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வகையில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment