10 March 2014

காணியற்றவர்களுக்கு அரச காணி சட்டத்திட்டங்களுக்கமைய காணி வழங்கப்படும்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் காணியற்ற மக்களின் காணி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு அம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவருமான முருகேசு சந்திரகுமார் வட்டக்கச்சி ஐந்து வீட்டுத்திட்டப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு காணியற்ற மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த வேளையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் வட்டக்கச்சி மற்றும் பளை பிரதேசங்களில் காணியற்ற மக்களின் காணி பிணக்குகளை தீர்க்கும் வகையில் வனவள திணைக்களத்தின் அனுமதியினை கோரியிருந்தோம் ஆனால் பளை பிரதேசத்தில் நாம் கோரிய இடத்திற்கான அனுமதி கிடைத்துவிட்டது வட்டக்கச்சி பிரதேசத்தில் மாத்திரம் வனவள திணைக்களம் இங்கு அடர்ந்த காடுகள் எனவும் அந்த காடுகளை அழிக்க முடியாது எனவும் அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள்

ஆகவே இந்த பிரதேசத்திற்கான அனுமதியினை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது நேரடியாக இந்த பிரதேசங்களை பார்த்தபோது வனவள திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டது போன்று அடர்ந்த காடுகள் இங்கு இல்லை. விரைவில் நான் நேரில் பார்த்த நிலைமையினை புகைப்பட ஆதாரத்துடன் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று காணி வழங்குவதற்கான அனுமதியினை பெற்று காணியற்ற மக்களுக்கு அரச காணி சட்டதிட்டங்களுக்கு அமைவாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் 

அதற்கிடையில் வீட்டுத்திட்டம் முடிவடைந்து விடும் என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை காணி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட இப்பிரதேசத்திற்கான வீதி, மின்சாரம், குடிநீர், உள்ளிட்ட உட்கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு இந்த பிரதேசத்தை ஒரு மாதிரி கிராமமாக மாற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment