10 March 2014

முசலியில் முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டம்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம முஸ்ஸிம் மக்கள் தமது காணிகளை கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்துள்ளமையினை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மறிச்சிக்கட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடற்படையினர் மறைக்கார் தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான வயல் காணி மற்றும் வீட்டுக்காணி என சுமார் 250 ஏக்கர் காணியை அபகரித்திருந்த நிலையில் மேலும் இம் மக்களுக்கு வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியையும் அபகரித்துள்ளதால் இக்கிராம மக்கள் நிரந்தரமாக தங்களுக்கு காணி இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

இராணுவத்தினரும், கடற்படையினரும் காணியை தன்வசப்படுத்தியுள்ள நிலையில் குறித்த காணியினை அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

100 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் காணி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 150 குடும்பங்களுக்கு இது வரை காணி வழங்காத நிலையில் வழங்கப்பட்ட காணிகளை படைத்தரப்பினர் அபகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அம் மக்கள் தங்களுக்கு காணியினை உடனடியாக வழங்குமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment