21 March 2014

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா கிராமங்களில் இராணுவத்தினர் தேடுதல்

அண்மையில் கிளிநொச்சி தருமபுரம் புளியம் பொக்கனை பகுதியில் பயங்கரவாத தடுப்ப் பிரிவினால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை தேடிச்சென்ற பொலிசார் மீது சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பொலிசார் பொலிசார் ஒருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்ற குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாரி அவருடைய மகள் விபூசிகா ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு தாய் ஜெயக்குமாரி பூசாவிலும் மகள் நன்னடத்தை முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த சம்பவத்தையடுத்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கிராமங்களில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் அங்கு மக்கள் பதற்றமும் அச்சமும் அடைந்திருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மவாட்டம் சுதந்திரபுரம், இருட்டுமடு,தேவிபுரம் ஆகிய கிராமங்கள் இன்று அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள,;  இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும், பதிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாகவும் அப்பகுதிகளில் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தேவிபுரம் பகுதி, சந்தி, பாரதி சிறுவவர் இல்ல சந்தி, காளிக்கோயில் சந்தி, செந்தளிர் சிறுவர் இல்ல சந்தி ஆகிய இடங்களில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. 

வீடுவீடாகச் சென்று தேடுதல் நடத்திய படையினர் வீட்டிலிருப்பவர்களின் விபரங்களைத் திரட்டியதுடன், இளைஞர்களையும் முன்னாள் புலி உறுப்பினர்களையும்; மைதானம் ஒன்றிற்குப் அழைத்துச் சென்றதால் உறவினர்கள் பெரும் அச்சமடைந்திருந்தனர். தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று பதட்டமடைந்திருந்தனர். கொளுத்தும் வெய்யிலில் அந்த இளைஞர்கள் பல மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கேணியில் ரி.ரு.டி என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் சிலர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சபாரத்தினம் ஜெயரமேஷ்(வயது 37) என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் மனைவி மேரி கனிஸ்ரா தெரிவிக்கையில் தனது கணவர் மீன்வியாபாரம் செய்து வருபவர் என்றும் வீட்டுக்கு அருகில் இருந்த கடையில் கதைத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் என்றார். 

இதேவேளை, வவுனியாவில் பூந்தோட்டம், அண்ணாநகர், மாறம்பைக்குளம், கருப்பனிச்சங்குளம், காத்தார்சின்னக்குளம் போன்ற கிராமங்கள் இராணுவத்தினராலும், காற்சட்டை ரீசேட் உள்ளிட்ட சிவில் உடை அணிந்த படையினராலும் தேடுதல் நடவடிக்கைகள் நேற்றிரவும், இன்றும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார் 

இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அரசுக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரண்டு தமிழ் இளைஞர்களைத் தாங்கள் தேடி வருவதாகவும் அதற்காகவே இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். 

No comments:

Post a Comment