21 March 2014

படுகொலைகள் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தாததால் சர்வதேசத்திடம் சென்றுள்ளோம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக திருகோணமலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஹர்த்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு அதரவு தெரிவிக்க வேண்டாம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அவர் இதுகுறித்து தெரிவிக்கையில் வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் தொடர்பாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை தமிழ் மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்ட இரா. துரைரெட்ணம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையினை முறியடிப்போம் என்ற தலைமையில் திருகோணமலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் ஹர்த்தாலுக்கு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரச, தனியார் நிலையங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30வருட காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வீரமுனைப்படுகொலை, காரைதீவு படுகொலை,வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை,உடும்பன்குள படுகொலை என படுகொலைகளின் பட்டியல்கள் நீண்டுசெல்கின்றன.

இந்த படுகொலைகளுக்கு இன்றுவரை எதுவித விசாரணைகளும் அற்ற நிலையே உள்ளது. இவைகள் நீதிக்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட கொலைகளாகும். ஒரு நாட்டின் அரசாங்கம் தனது சொந்த நாட்டு மக்களையே கொலைசெய்த வரலாற்றினை  நாம் சர்வதேசம் மூலம் இன்று வெளிக்கொணர்ந்துள்ளோம். இது தொடர்பாக அரசாங்கம் உரிய விசாரணை மேற்கொள்ளாததன் காரணமாக சர்வதேச விசாரணையை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது. 

எங்களை அடக்கியாள நினைத்த சக்திகளுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகின்றோம். நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை.எங்களை கொன்று குவித்தவர்களுக்கு எதிராகவே போராடுகின்றோம். 

வட, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச ரீதியில் இன்று தமிழ் மக்களுக்கு சார்பான ஒரு நிலை தோன்றியுள்ளது. இதனை வலுவாக்கவேண்டியது தமிழர்களின் இன்றைய முக்கிய கடமையாகும்.

தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை அற்ற நிலையிலேயே சர்வதேசத்திடம் சென்றுள்ளனா. என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொண்டு அதனை பலவீனப்படுத்துவதற்கு அரச ஆதரவு அடிவருடிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க கூடாது எனக் கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment