13 May 2014

15 வருடமாக சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் இல்லை.

Add caption
வன்னிப் பகுதி பாடசாலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றிவரும் ஆசிரியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென வன்னி உதவி ஆசிரியர் ஒன்றியம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
 
ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்படுவதாவது வட மாகாணத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட அதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், வவுனியா வடக்கு, மன்னார் மடு, வடமாராட்சி கிழக்கு ஆகிய ஆறு கல்வி வலயங்களையும் சேர்ந்த வன்னிப் பகுதித் தொண்டர் ஆசிரியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
 
2009ம் ஆண்டு வட மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் கூட வன்னிப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
 
வன்னிப் பகுதி தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்த நியமனம் வழங்குமாறு கோரி வடமாகா கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக பல தடவைகள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். 

அதனையடுத்து 01-07-2013 முதல் கடமையேற்கும்படியாக ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டு மாதாந்த சம்பளமாக பத்தாயிரம் ரூபா மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது. ஏனைய ஆசிரியர்களைப் போல முழு நேரம் பணியாற்றும் இவர்களுக்கு வழங்கப்படும் மாதந்த சம்பளம் பத்தாயிரம் ரூபா போதாது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 
எனவே கல்வித் தகைமைகளையும், சேவை காலத்தையும் கணக்கில் கொண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனத்தை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தபோதிலும் இதுவரை வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment