10 May 2014

இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில்

இந்திய- இலங்கை மீனவர்கள் தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளும் தமிழக மீனவர்வர்கள் சங்க பிரதிநிதிகள் நாளை கொழும்பு வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் மீனவர் சங்க சார்பில் 18 பிரதிநிதிகளும், இந்திய அதிகாரிகள் எட்டுபேரும் பங்குபற்றுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை இலங்கைத் தரப்பில் மீனவர் சங்கங்களின் சார்பில் 20 பிரதிநிதிகளும் இலங்கை அரசு சார்பில் 10 அதிகாரிகளும் பங்குபற்ற உள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவிக்கிறது.
 
இரு நாட்டு மீனவர் சங்கங்களுக்கிடையிலான முதற் சுற்று பேச்சுவார்த்தை ஜனவரி 27 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்றது. இதில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதோடு அவற்றில் பல உடன்பாடுகளை இந்திய தரப்பு மீனவர்கள் மீறியிருந்தனர். 

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 13 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிபந்தனைகளினால் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. மீன்பிடி அமைச்சின் கோரிக்கையை அடுத்து பேச்சுவார்த்தைகளை மார்ச் 12 அல்லது 13 ஆம் திகதி நடத்த முடியும் என இந்திய மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி, 12 ஆம் திகதி பேச்சுக்கு திகதி குறிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், கடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மீறப்பட்டது குறித்தும் அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பது பற்றியும் 2ம் கட்ட பேச்சில் ஆராயப்பட உள்ளது.
 
இலங்கை சார்பில் யாழ்., மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருமலை, புத்தளம் மாவட்ட மீன்பிடி சங்க பிரதிநிதிகள் 20 பேர் பங்குபற்றுகின்றனர்.
 
மீனவர் சங்க பிரதிநிதிகள் நேருக்கு நேர் பேச்சுநடத்த உள்ளதோடு அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக செயற்பட உள்ளனர்.
 
இதேவேளை, இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தாம் இணங்கப் போவதில்லை எனவும் தமிழ்நாடு மீனவர்கள் எமது கடற்பரப்பில் மீன் பிடிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தமது தரப்பு உறுதியாக இருக்கும் எனவும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சு கொழும்பு சின்சி வீதியிலுள்ள செடக் நிறுவனத்தில் நடைபெறும்.


No comments:

Post a Comment