13 May 2014

தமிழ், முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

தமிழ் முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை பாதுகாத்தால்தான் பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்க முடியுமென நீரியல்வள மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனரட்ன சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச தாதியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தாதியர் தின விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டுமாயின் அதற்கு வைத்தியர்களும், தாதியர்களும் ஒன்றிணைந்து சேவையை வழங்க வேண்டும். தாதியர்களுக்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வைத்தியர்கள் மறுக்கின்றனர். வைத்தியர்கள் உலகை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும். தாதியர்களின் உரிமைகளை வைத்தியர்கள் வழங்க வேண்டும். அவர்களின் உரிமைகளை முடக்கும் செயலில் வைத்தியர்கள் ஈடுபடக்கூடாது.
 
குறிப்பாக நமது நாட்டில் சிங்கள மக்கள் தமது உரிமைகளுடன் சிறப்பாக வாழ வேண்டுமாயின் அவர்கள் தமிழ், முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை பாதுகாக்க வேண்டும்.
 
அதுபோலவே வைத்தியர்கள் தமது உரிமைகளுடன் சிறந்த சேவையை வழங்க வேண்டுமாயின் அவர்கள் தாதியர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றை பாதுகாக்க வேண்டும்.
 
எனவே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றும் நிலை தாதியர்களுக்கு இனியும் ஏற்படக்கூடாது. அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment