10 May 2014

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காமல் எந்தவித தீர்வையும் காணமுடியாது.

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இலங்கை அரசு நியமித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லையென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
 
தீர்வு சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்வு குறித்து பேசுவதாயின் பாராளமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு அரசாங்கம் அவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே பிரச்சினைக்குத ;தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லையென்றார்.
 
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு த.தே.கூ இனருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்தியா உட்பட பல நாடுகள் த.தே. கூ இனரை தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய போதும் அவர்கள் இதுவரை அதில் பங்கேற்கவில்லை.
 
அதேவேளை தென்னாபிரிக்காவின் உண்மையை அறியும் குழுவின் அனுபவங்களை பெற்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருந்தாலும் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும்.
 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சகல தரப்பினருடனும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் இறுதியில் அது பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment