11 August 2014

இஸ்ரேலிய பெருமித உணர்வு

இஸ்ரேலியர்கள் போல் வாழவேண்டும். அவர்கள் எமக்கு முன்னுதாரணம். எந்த ஒரு வளமும் இல்லாத அந்நாடு இன்று உலகத்திற்கே சவாலாக விளங்குகிறது. அவர்கள் உலகின்; மகா புத்திசாலிகள் . அவர்களைப் போன்றவர்கள் தான் நாமும் என்று தமிழ் தேசியவாதம் மார்தட்டி வந்ததுண்டு.

கடந்த தலைமுறை தமிழ் தலைவர்களின்  யாழ் முற்றவெளி மைதான கூட்டங்களில் இந்த புழங்காங்கிதம் 1970களில்  ஒலித்ததை அந்தகால கட்டத்தைச்சோந்த பலர் மறந்திருக்கமுடியாது.

ஒரு படி மேலாக ஒரு நாடே இல்லாத யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடிந்திருந்தால் நாம் ஏன் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்ற கேள்விகளும் இந்த மேடைகளில் அடிக்கடி கேட்கப்படும்.

இந்த இஸ்ரேல் மாயை யாழ் மத்தியதர வர்க்க மனங்களில் இன்று வரை குடி கொண்டுதான் இருக்கிறது.

இந்த கருத்தியல் செல்வாக்கிற்குட்பட்ட புலிகள் 1980களின் முற்பகுதியில் இஸ்ரேலிய மொசாட்டிடம் பயிற்சி பெறும் அளவிற்கு சென்றது.

ஆனால் ஈழப் போராட்டத்தில் முற்போக்கான பிரிவினர் என அழைக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உறுப்பினர்கள் சிலர் பாலஸ்தீன விடுதலை இயக்கங்களில் ஒன்றான அல்பற்றாவிடமும், பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணியிடமும் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

1980களின் முற்பகுதியில் புலிகளுக்கு பயிற்சி அளித்த காலத்திலேயே இலங்கை அரசின் படையினருக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் பயிற்சி அளித்தது.

இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் மனிதகுல வரலாறு கண்டிராத பேரழிவைச் சந்தித்தித்தவர்கள்  யூதர்கள். சுமார் 60 லட்சம் யூதர்கள் நாசிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் யூத சமூகத்தின் ஒருபகுதியினருக்கு பிரிட்டன், அமெரிக்கா சேர்ந்து விவிலியக் கதைகளின் பின்னணியில் ஒரு தேசத்தை அரபுலகில் உருவாக்கினர்.

அது மனிதப்பேரவலத்தை சந்தித்த யூதமக்கள் மீது கொண்ட கருணையினால் அல்ல.

அரபுலகின் எண்ணெய் வளங்களைச் சூறையாடுவதற்கான மூலோபாயத்தின் ஒருபகுதியாக அது இருந்தது.

அப்போது ஆரம்பித்த பாலஸ்தீனர்களின் அழிவு ஏற்கனவே தசாப்தங்களாக பாலஸ்தீனர்களின் வாழ்வும் வாழிடமும் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டு விட்டன.
இப்போது மிச்சமீதியான காசாவில் நிகழ்கிறது.

அரபுலகத்தை உய்ய விடாமல் செய்ததில் வடஅமெரிக்க மற்றும் மேற்குலகின் கைங்கரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்களை உருவாக்குவதிலும் -சர்வாதிகார ஆட்சிகளை ஸ்தாபிப்பதிலும் - ஆடம்பர - மூட - பழமைவாத அரசுகளை பாதுகாப்பதிலும் இந்த ஏகாதிபத்திய அதிகார சக்திகள் பங்களித்திருக்கின்றன.
நிதானமான நியாயமான சமூகப்புரட்சி இயக்கங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

உதாரணமாக எகிப்தின் தல்லஹீரீர் சதுக்கத்தின் போராட்டம் எத்தகைய உயர் தார்மீக வலுக்களைக் கொண்டிருந்தது.

கடைசியாக ஆட்சிக்கு வந்தவர்கள் யார். கேடுகெட்ட அடிப்படைவாதிகள் பின்னர் இராணுவவாதிகள்.

பாலஸ்தீனத்தில் ஈவிரக்கமற்ற இடையறாத நீண்ட 6 தசாப்த கால தாக்குதல் யுத்தம் எந்த நல்ல அம்சங்களையும் விட்டுவைக்கவில்லை.

யுத்த காட்டுமிராண்டித்தனத்தினுள் மத்திய கிழக்கு ஒரேயடியாக சிக்கவைக்கப்பட்டிருக்கிறது.


இன்று மனிதகுலத்தின ஒரு பகுதியினரை இவ்வாறு அழிப்பது இயல்பானது சகஜமானது என்ற அளவிற்கு அற உணர்வுகள் மரத்துப் போய் நிலைமைகள் சிதைவடைந்திருக்கின்றன.

சிறுவர்களும் - பெண்களும் பெருமளவில் கொல்லப்படும் போது உலகின் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்புக்களும் ஐ.நாவும் அடக்கி வாசிப்பது அதிர்ச்சியளிக்கிறது

உலகம் இரண்டு முகாம்களாக இருந்த காலத்தில் உலகளாவிய அளவில் நிலவிய தார்மீக விழுமியங்கள் இன்று சிதறிச் சின்னா பின்னமாக்கப் பட்டிருக்கின்றன.

காப்பிரேட் உலகம் - நவ தாராளவாதம் மனிதர்களின் வாழ்வை இருப்பை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளவில்லை.

சாத்தியமான வரை சாத்தியமான அளவு உலகைச் சூறையாடுகின்றன.

இஸ்ரேல் என்ற நாடு இன்று பெருமைக்குரியதல்ல. அது அபகீர்த்தியானது.
ஒரு சமுதாயத்தை மக்கள் கூட்டத்தை பூமிப்பந்தில் இருந்து அழித்து விடுவது எந்த ரகத்தில் சேரும்?

ஒருகாலத்தில் உலகம் காணாத பேரழிவைச் சந்தித்த சமூகத்தின் அங்கத்தினரா இப்படிச்செய்கிறர்hகள் என்ற கேள்வி எழுகிறது.

உலகம் பூராவும் உள்ள யூதமக்கள் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மனக்கிலேசம் அடைந்துள்ளனர்.

மானிட விடுதலைக்கும்- இயற்பியலுக்கும் உன்னத பங்களிப்பை வழங்கிய மார்க்ஸ்ம்; ஐன்ஸ்ரினும் யூத சமூதாயத்தை சேர்ந்தவர்கள் .

பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராக சத்திய ஆவேசத்துடன் குரல்கொடுக்கும், போராடும் யூதமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

இந்த உலகளாவிய யூதர்களை அல்ல யாழ் மையவாதம் வியப்பது. இஸ்ரேலிய சியோனிசத்தை தான் அது வியந்து நிற்கிறது.

2009 இற்கு பின்னர் இந்த சியோனிச பெருமித வியாதி பேரினவாதிகளைத் தொற்றிக் கொண்டு விட்டது.

நாங்கள் இஸ்ரேல் காரர்களாக்கும் என்று இறுமாந்திருக்கிறார்கள்.
“வினாசகாலே விபரீத புத்தி” என்பார்கள்.
அது இன்று பொதுப்பலசேனாவரை புற்று நோயாக வியாபித்திருக்கிறது.

இந்த சியோனிச கருத்தியல் இன்று சிறுபான்மையினரை அடக்கி வைத்திருக்க பேரினவாதத்திற்கு தேவைப்படுகிறது.

அதேபோல்  உலகம் முழுவதும் பரந்திருக்கும் நாம் இலங்கைப் பெரும்பான்மைச் சமூகத்தை ஒரு வழி பண்ணி விட முடியும் என்று யாழ்மையவாதம் கருதுகிறது.

இந்த விபரீதக் கனவுகளுடன்தான் இந்த நாடு பல தசாப்தங்களினூடாக சிதிலமாக்கப்பட்டு வந்திருக்கிறது.

“தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற கதைகளும் துட்டகைமுனு எல்லாளன் கதைகளும் இந்த பெருமிதங்களைத்தான் பேசுகின்றன.

இப்போது இஸ்ரேல் வாய்த்திருக்கிறது.

யாழ் மையவாதம் எப்போதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் உள்ளுரில் நிகழ்ந்தாலும், சர்வதேச அளவில் நிகழ்ந்தாலும் தனது நலன்சார்ந்து நடந்து கொள்ளும் தனக்கு வாய்ச்சால்தான் மனித உரிமை.

இல்லாவிட்டால் தன்னைத் தவிர முழு மனிதகுலத்திற்கும் அழிவு நேர்ந்தாலும் பிரச்சனை இல்லை.

இந்த யாழ்மையவாதம் பாலஸ்தீனர்களின் போராட்டத்தையோ தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தையோ ஆதரித்தது கிடையாது.

இப்போது காசா மக்களுக்காக மூச்சு கூடவிடவில்லை.

இலங்கையின் அதிகார சக்திகளும் இஸ்ரேலை காட்டமாக கண்டிக்க முன்வரவில்லை.

சர்வதேச அளவில் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுபவர்களும் காசா விடயத்தில அடக்கி வாசிக்கிறார்கள்.

ஏகாதிபத்திய நலன் சாhந்தே மனித உரிமை பற்றிப் பேசப்படுகிறது.
பிரதானமாக ஏகாதிபத்திய நலன்சார்ந்தே மனித உரிமைக் கருத்தியல்கள் உருவாக்கப்படுக்கின்றன.

அந்த ஏகாதிபத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தால் அந்த மக்கள் கூட்டம் அழிந்து போனாலும் பிரச்சனை இல்லை. அது பாலஸ்தீனர்களாக இருந்தாலென்ன சிரியர்கள், கிழக்கு உக்கிரேனியர்கள், கிறிமியர்களாக இருந்தாலென்ன.

தற்போதைய உலக ஒழுங்கில் மாற்றம் தேவைப்படுகிறது.  வலிமையற்றவர்கள் இந்த உலகில்  நியாயமான பங்குள்ளவர்கள் வாழ்வதற்கான உலக ஒழுங்கொன்று தேவைப்படுகிறது

சுகு - ஸ்ரீதரன்

No comments:

Post a Comment