11 August 2014

ஒரு அன்னையின் பிரிவு

தோழர் சின்னபாலா என மனித நேயம் கொண்ட நல் இதயங்களால் நேசிக்கபட்ட பாலநடராஜனின் அம்மா ஸ்ரீமதி காமாட்சிப்பிள்ளை சில நாட்களுக்கு முன்னர் உயிர் நீத்தார். அவரது இறுதி சடங்குகள் ஊரெழுவில்  உள்ள அன்னாரது வீட்டில் 10-08-2014 இல் நடைபெற்றது.

அரசியல் சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தோழர் பாலா யாழ்ப்பாணத்தின் அழுத்தமான பழமைப் பிடிப்புக் கொண்ட சம்பிரதாயங்கள் ஆசாட பூதித்தனங்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகப் போராடியவர்.

யாழ் சமூகத்தின் ஆதிக்க மமதைக்கெதிராகவும் தமிழ் சமூகத்தின் மீதான தேசிய ஒடுக்குமுறைக்கெதிராகவும் ஒரேகாலத்தில் செயற்பட்டவர்.

அவரது வீடு ஒருவகையில் சமூகச் செயற்பாட்டு மையமானது. மிகவும் நெருக்கடியான காலத்தில் வடக்கு கிழக்கின் அத்தனை திசைகளில் - வெளிநாடுகளில் இருந்து வரும் சமூகப் பிரக்ஞை அக்கறை கொண்டவர்களை அரவணைத்தது.

அந்த வீட்டின் அன்னை காமாட்சிப்பிள்ளைதான் காலமானார்.

தோழர் பாலாவிற்கு 5 சகோதரிகளும் ஒரு சகோதரரும். மனைவியார் மூன்று பெண்பிள்ளைகள். தந்தையார் நீண்ட காலத்திற்கு முன்னர் காலமாகிவட்டார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் ஆரவாரமில்லாமல் இயல்பாக தன்னை அர்ப்பணித்த இந்த குடும்பம் பிரதியுபகாரமாக எதனையும் பெற்றதில்லை.
 
இன்று யாரோ எல்லாம் ஆலவட்டங்கள் ,தாரதப்பட்டைகள் ,பரிவாரங்களுடன் திரிகிறார்கள்.
ஆனால் அந்த வீடும் மனங்களும் அதே எளிமையுடன் பிரக்ஞையுடன்.

அந்த வீடு வடக்கின் சமகால முற்போக்கு ஜனநாயக இயக்கவரலாற்றின் ஒரு குறியீடு.

தோழர் சின்னபாலா என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் அவரது அன்னையின் பணி மகத்தானது.

கோர்க்கியின் அன்னையை நாம் வாசித்திருப்போம்.

அந்த அற்புதமான படைப்பைத்தான் அன்னை காமாட்சியும் தோழர் சின்னபாலாவும் நினைவுபடுத்துகிறார்கள்.

இத்கைய மனிதர்கள் எமது சமூகத்தில் அருந்தலாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
இவர்களின் நினைவுகள் என்றென்றைக்குமாக சமூகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் இல்லையேல் வரலாறு திரிந்து விடும்


பொதுவாழ்விற்கான நடைமுறைகளை தனிப்பட்ட வாழ்விலும் கொண்டிருந்தவர்கள்.

ஏனெனில் ஒரு சமூகத்தின் தார்மீக வலுக்கள் இத்தகைய மனிதர்களால்தான் நிலை நிறுத்தப்படுகின்றன. செழுமையுறுகின்றன.

சமூகத்தில் தீண்டாமை ,பெண் அடிமைத்தனம் ,வறுமை, பிரதேசவாத குறுகிய எல்லைகள் இவற்றுக்கெதிராக அவர் தன்னியல்பாக வாழ்ந்தார்.

ஊருக்கு உபதேசம் செய்யவில்லை.

உண்மையான கவிஞராகவும்  எழுத்தாளராகவும் அவர் இருந்தார்.

நடிப்புத் தேசியவாதி அல்ல.

எத்தனையோ அன்னையர் சகோதர சகோதரிகளின் வரலாறு எழுதப்படாமல் இருக்கிறது.
தனது 30 ஆண்டுகால சமூக வாழ்வை துன்பமும,; அவலமும், சவாலும் அச்சுறுத்தலுமாக கழித்தவர். அவரது மரணம் குரூரமானது.

அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பில் எந்த சராசரி சௌகரியமும் அவருக்கிருந்ததில்லை.

அவரது குடும்பமும் அவ்வாறு தான்.

ஏனெனில் சமூகத்தை சூறையாடியவர்கள் பலர் கனவான்களாக உலாவரும் காலமிது.

உண்மையான நட்பும் தோழமையும் இந்த எளிமையான இல்லங்களில் தான் உறைந்து கிடக்கின்றன.

பெரும் பணச் செலவின் நடக்கும் அரசியல் வாதிகளின் அல்லது சில அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆடம்பரங்களில் அல்ல.

அன்னை காமாட்சி அம்மாளுக்கு எம் இதய அஞ்சலிகள்



சுகு- ஸ்ரீதரன்

No comments:

Post a Comment