22 June 2015

யாழில் தியாகிகள் தினம்

இவ்வருட 25வது தியாகிகள் தினம் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் 19-06-2014 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு தோழர் மோகன் தலைமை வகித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்து தம் உயிரை அர்ப்பணித்த தோழர் மிசோ, தோழர் சந்திரன் ஆகிய இருவரதும் தாயார் யாழில் தியாகிகள் தினம் யாழில் தியாகிகள் தினம் ஆ. ரஞ்சிதம் உயிர் நீத்த தோழர்கள், சக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் படத்திற்கு தீபம் ஏற்றியதை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த தியாகிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் சகோதரர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நினைவு சொற்பொழிவாற்றிய யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் இரா.சிவசந்திரன் தாம் முன்னெடுத்த போராட்டத்திற்கு விசுவாசமாக உண்மையாக உழைத்த இளைஞர்களை நினைவு கூரும் வகையில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வரவேற்றார். எதிர்காலச் சந்ததி சம்பந்தப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆவணப்படுத்தல்கள் தேவை எனவும் குறிப்பிட்டார். இங்கேயுள்ள படங்கள் அதை ஓரளவு பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை நமது பிரதேச சுற்றுப்புறசூழல் பற்றியும் அக்கறை காட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெய் கலப்பால் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி எடுத்துரைத்த அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாததையும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளத்தை இரண்டு அடி உயரமாக நிர்மாணித்து அதன் மூலம் சேகரிக்கப்படும் நீரையே குடிநீர் தேவையுள்ள இடங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இரணைமடு குளத்திலிருந்து நீரை பெறுவதற்கான திட்டத்தை பேராசிரியர் துரைராஜாவே வரைந்திருந்தார். அரசியல்வாதிகள் சிலரின் குறுக்கீடுகளால் அத்திட்டம் தடைப்பட்டு போய்விட்டமையின் பாதகத்தையும் எடுத்துரைத்தார்.

இங்கு உரையாற்றிய பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு உரையாற்றும் போது தியாகிகளின் அர்ப்பணிப்பை எடுத்துரைப்பது மாத்திரம் அவர்களின் தியாகத்துக்கு ஈடாகாது எவ்வித சுயநலமுமின்றி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான தோழர்களின் இழப்புக்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் இன்று மாகாணசபை என்ற ஒன்று இருந்திருக்க முடியாது என்றார். இது குறித்து தோழர் நாபாவிடம் காணப்பட்ட தூரநோக்கு பார்வையை ஏனையோர் சரியாக புரிந்திருந்தால் வடக்கு கிழக்கு என இரண்டாக பிரிந்திருக்காது இன்று அதிகாரங்கள் கொண்ட மாகாணசபையாக இருந்திருக்கும் என்றார். தோழர் பத்மநாபா தனியே தனது கட்சி என்ற கொள்கையை கொண்டிராமல் தென்னிலங்கை முற்போக்குவாதிகள், இடதுசாரி கட்சிகள், மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள், முஸ்லீம் கட்சிகள் என கட்சி பேதமின்றி அரசியல் நடவடிக்கைகளை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கவொரு விசேட அம்சமாகும் என்றார்.

அஞ்சலி கூட்டத்தை தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டதுடன் 25 வது தியாகிகள் தின நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உயிர்நீத்த தோழர்களின் குடும்பத்தவர்களுக்கு பண உதவியும் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment