06 November 2015

பத்திரிகை தர்ம ரீதியில் செயற்படவேண்டும்-10 ஆயிரம் ரூபா பிச்சைக் காசு

10 ஆயிரம் ரூபா எனக்குப் பிச்சைக் காசு என்று வடக்கு மாகாண சபையில் தெரிவித்த பிரதி அவைத் தலைவர் ம. அன்ரனி ஜெகநாதன், 'உதயன்' பத்திரிகையையும் காரசாரமாக விமர்சித்தார்.  வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முதலமைச்சர் - அமைச்சர் ஆகியோரின் சம்பளங்கள் தொடர்பில் குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதன்போதான விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்க்கட்சித் தலைவராகச் சி.தவராசா இந்தச் சபைக்கு வந்ததில் இருந்து எங்களுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளுக்குப் போகின்றவர்கள். எனக்குத் தரும் எரிபொருள் கொடுப்பனவும் காணாது. நாங்கள் ஒவ்வொரு செத்த வீட்டுக்கும் போகின்றோம், ஒவ்வொரு கலியாண வீட்டுக்கும் போகின்றோம். 
 
எதிர்க்கட்சித் தலைவர் கேட்டது நல்ல விடயம். இந்த விடயங்கள் சொல்லப்படுகின்ற போது பத்திரிகைகள் ஏதோ குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பிரதி அவைத் தலைவருக்குச் சம்பளம் ஏனைய 8 மாகாணங்களை விட வடக்கு மாகாணத்துக்குக் குறைவு. இதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். அதனுடைய பிரதியை ஒரு ஊடகவியலாளர் கேட்டார். நான் அதை அவருக்குக் கொடுத்தேன். 'உதயன்' பத்திரிகையில் செய்தி. அதிகரித்த சம்பளம் கோருகின்றார் பிரதி அவைத் தலைவர். 
 
நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர் அல்ல. உதயன் சில வேளைகளில் பிச்சைக்காரராக இருக்கலாம். நான் ஒன்றும் பிச்சைக்காரன் அல்ல. எட்டு மாகாணத்திலும் ஒரு சம்பளம், வடக்கு மாகாணத்துக்கு மட்டும் ஒரு சம்பளம் எனச் சுட்டிக்காட்டச் சொல்லப்பட்டதே ஒழிய இந்த பத்தாயிரம் ரூபா காசு சாதரணமான காசு. எட்டு மாகாண சபைக்கு ஒரு வேதனம், வடக்கு மாகாண சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டு எழுதிய கடிதத்தை உதயன் பத்திரிகை, பிரதி அவைத் தலைவர் அதிக சம்பளம் கோருகின்றார் என்று இப்படி படுகேவலமான முறையில் எழுதுகின்றார்கள். செய்தி இல்லாவிட்டால் போய் விழுந்து படுங்கள். இப்படிச் செய்யக் கூடாது. இது மிகக் கேவலமான விடயங்கள். 
 
பத்தாயிரம் பிச்சைக் காசு. எட்டு மாகாணத்திலும் ஒரு சம்பளம், வடக்கு மாகாணத்தில் வேறு சம்பளம் இதுதான் செய்தி. நாங்கள் அதிகரித்த சம்பளம் கோருகின்றோமாம், நிலுவைக் கொடுப்பனவு கேட்கின்றோமாம், அது எங்களின் உரிமை. அதை உதயன் தீர்மானிக்க முடியாது. முதலமைச்சர் சொன்னது போல பத்திரிகைகள் எதையும் போடுவார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
 
பத்திரிகை தர்ம ரீதியில் செயற்படவேண்டும். திருப்பி நாங்கள் உதயனுக்கு எதிராக மின்னஞ்சல் போட முடியும், துண்டுப்பிரசுரம் அடிக்க முடியும். ஒருவரையும் அவமதிக்கக்கூடாது. இது பிழையான வேலை. 
 
ஏனைய மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ள சலுகை இங்கு இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு, ஏனைய மாகாணங்களுக்கு வாகனம் வழங்கப்படுவதைப் போன்று எங்களது மாகாணத்திலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாகனம் ஒன்று வழங்கப்படவேண்டும். கண்ணியமாகச் செயற்படுபவர் அவர். வீட்டு வாடகை சம்பந்தமான சுற்றறிக்கை இல்லை. அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்துதான் நடக்கின்ற விடயம். நாங்கள் பிச்சை எடுக்கமாட்டோம். எங்களுக்கும் பத்திரிகைக்கு எதிராக எழுதத் தெரியும். எங்களுக்கும் பத்திரிகைக்கு எதிராக இணையத்தளம் உருவாக்கி எழுதத் தெரியும். இத்தகைய சேட்டைகள் விடக்கூடாது - என்று தெரிவித்தார். 
 
 நன்றி- உதயன்
 

No comments:

Post a Comment