13 November 2015

இலங்கைத் தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்த தோழர் அரணமுறுவல்

1977ல் இலங்கையில் இனக்கலவரம் நடந்து முடிந்த பின்னர் கூட தமிழகத்தின் அரசியல்வாதிகள் உட்பட தமிழக மக்கள் யாவரும் இந்தியாவிலிருந்து சென்ற இலங்கைத் தமிழர்கள் அங்கே தனிநாடு கோருவது தவறானது என்ற கருத்தையே கொண்டிருந்தனர்.

அன்றைய கால கட்டத்தில் இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் தங்களுக்கென ஒரு அரசை உருவாக்குவதற்காக வேண்டி ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்படியான ஒரு போராட்டத்தின் போது அதற்கு இந்திய அரசின் ஆதரவு இல்லாவிட்டாலும் போராட்டத்திற்கு எதிராக அது செயற்படுவதனை தடுக்கும் ஒரு பொறிமுறை அரசியற் சக்தியாக தமிழ்நாடு மக்கள் இயங்க வேண்டும் என்ற தூர தரிசனப் பார்வையுடன் 1976ன் ஆரம்பப் பகுதியில் சென்னையில் தமிழக ஈழ நட்புறவுக் கழகம் என்ற ஒரு அமைப்பு சட்ட ரீதியான பதிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. பேராசிரியர் இளவரசு அவர்கள் அதன் தலைவராகவும் செயலாளராக தோழர் அரணமுறுவலும் செயற்பட்டனர்.

தமிழ் மொழியில் பாண்டித்தியமும் தமிழ் ஆசிரிய அச்சு பதிப்பு பத்திரிகை ஆகிய சகல தொழில் துறைகளிலும் ஆழ்ந்த அனுபவமும் கொண்ட தோழர் அரணமுறுவல் தனது இறுதி மூச்சு வரை இலங்கைத் தமிழர்களுக்காக 1976ல் ஆரம்பித்த தனது முயற்சியிலிருந்து சற்றேனும் ஓய்ந்திருந்ததே இல்லை.

இக் கழகத்தின் ஊடாக சென்னைப் பொது நூலகத்தில் மாதந்தோறும் ஒரு கூட்டத்தை இலங்கையில் இருந்து சென்னைக்கு வருகை தரும் அரசியல் இலக்கியப் பிரமுகர்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்து அதற்கு தமிழகத்தின் அறிவு அரசியல் இலக்கியம் பத்திரிகை ஆகிய துறை சார்ந்தவர்களை வரவழைத்து இலங்கையின் இனப்பிரச்சனை - ஈழக் கோரிக்கைக்கான தேவை என்பன பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக் கொடுத்தார். அதேவேளை இலங்கையில் ஈழம் என்னும் தலைப்புடன் ஒரு கைநூல் இக் கழகத்தின் பெயரில் வெளியீடு  செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் விநியோகிக்கப்பட்டது.

இவரது செயற்பாட்டு வீச்சின் அலைகள் தமிழ்நாட்டின் எல்லை கடந்து பெங்களுர் வரை சென்றது. ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டின் கட்சி பேதங்களைத் தாண்டி அனைத்து தமிழக மக்களின் ஏகோபித்த சக்தியாக அமைவதற்கு வேண்டிய வழிமுறைகளிலேயே அவர் செயற்பட்டார்.

ஈழப் போராட்ட அமைப்பின் அனைத்துத் தலைவர்களையும் ஆரம்பத்திலிருந்தே நேரடியாக அறிந்தவராகவும் அமைப்புகளின் அரசியலை பூரணமாகப் புரிந்து கொண்டவராகவும் இருந்த போதிலும் தோழர் தன்னை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. இலைமறை காயாகவே இறுதிவரை செயற்பட்டார்.

இடதுசாரி சிந்தனையுடன் எப்போதும் பாமர பாட்டாளி மக்களுடைய நலன்களின் அடிப்படையிலேயே செயலாற்றிய தோழர் அரணமுறுவல் இலங்கையில் இன ஒடுக்குறைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஈழப் போராட்டம் ஒரு சமத்துவ சமதர்ம சமூகத்திற்கான மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக நெறிப்படுத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியே வந்தார்.

இவருடைய இல்லம் ஆயிரக் கணக்கான ஈழப் போராளிகளை வரவேற்று உபசரித்து அரவணைத்து ஆதரித்து வீட்டில் உள்ளதைப் பங்கிட்டுப் பரிமாறி மனம் பூரிக்கும் பண்பாடு கொண்டதாகவே எப்போதும் விளங்கியது. 

பிரதிபலன் கருதாத- தன்னலமற்ற- உறுதியான-உழைப்பும் மனிதாபிமானப் பண்பும் கொண்ட தோழர் அரணமுறுவல் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்து நிற்பார்.

-அழகிரி

No comments:

Post a Comment