27 February 2016

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயல்வேன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் அதிகார பகிர்விற்கும் , இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சிறந்த அடித்தளமாக அமையும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினொல்ட் குரே கொழும்பு கதிரேசன் கோவிலில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வட மாகாணசபைக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்ட ஆறுநர் ரெஜினோல்ட் குரே நாம் அனைவரும் அரசியலமைப்பின் கீழ் செயற்பட வேண்டியவர்கள் எனபதை கருத்திற்கொண்டு செயற்படுவதே சிறந்தாகும். ஜனாதிபதியாக இருந்தாலும் அரசியலமைப்பின் கீழ் செயற்பட வேண்டுமென்பதே நியதி. 

இந்நாட்டில் இன, மத மொழி பேதமின்றி நாம் எல்லோரும் ஒரு தாயின் மக்களாக இணைந்து வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் வட மாகாணசபை மக்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். நாம் செய்வதை சொல்வோம் சொல்லுவதை தவறாது செய்து முடிப்போம். 

நான் பத்து வருடங்களாக மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்தேன் அதனால் மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்க வேண்டும் என்ற அனுபவங்கள் நிறையவே உள்ளது. இங்கு மக்களுக்கு அரசியல் ரீதியிலும், வாழ்வாதார ரீதியிலும் பல பிரச்சனைகளை இனங்கண்டுள்ளேன்.  அவற்றுக்கான நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். வாழ்வாதார மேம்பாட்டிற்காக வடக்கில் கரும்பு உற்பத்தியை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம். 

வடக்கில் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்கின்றோம். மக்கள் மனதளவில் மாற்றமடையும் போது மாத்திரமே குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இதனை பொலிசார் தலைமையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. 

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மீள்குடியமர்த்தல், மீன்பிடி, அபிவிருத்தி, பலாலி விமானநிலையம், குடிநீர் வசதி, சிறிய குளங்களை புனரமைத்தல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. ஆதற்கான அடிப்படை திட்டமிடல்களும் வகுக்கப்பட்டுள்ளன. கல்வி, போக்குவரத்து ஆகிய தொடர்பான அரசியல் சாசனங்கள் வடக்குக்கு எடு;த்துச் செல்வது மட்டுமல்லாது அதன் பலாபலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். 

மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே வடக்கு ஆளுநர்கள் செயற்படுவர் என்ற கருத்தும் உள்ளன. அரசியலில் தவறவிடப்பட்டவையை ஒற்றுமையுடனேயே சீரமைத்துக்கொள்ள வேண்டும். அதிகார பகிர்வுக்கு 13வது அரசியலமைப்புத் திட்டம் அடித்தளமாகியுள்ளது அதனைக் கொண்டு பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல மக்களிடையே சகவாழ்வையும் ஏற்படுத்தலாம் என்றார். 

No comments:

Post a Comment