09 March 2016

அரசாங்கம் வழங்கிய உறுதி மொழி மீறப்படுகிறது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளை எவ்வாறு அரசாங்கம் அச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியும் என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் இழுத்தடிக்காமல் அரசாங்கம் விரைவில் முடிவொன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேநேரம், காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? மீளவருவார்களா? இல்லையா? என்பதற்கும் அப்பால் காணாமல் போனவர்களின் குடும்பங்களை சமரசம்செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

காணாமல்போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனை வலியுறுத்தியிருந்தார். காணாமல்போனவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் உடனடியான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

யுத்தம் காரணமாகவே பலவந்தமாக காணாமல் போதல்கள் பல இடம்பெற்றுள்ளன. புலிகளாலும் இவ்வாறான காணாமல்போதல்கள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் விசாரணை நடத்துவது மற்றும் தீர்வொன்றை வழங்குவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். காணாமல்போனவர்களின் குடும்பங்களில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையானது அவர்களுக்கு தொடர்ந்தும் அதிர்ச்சிதரும் விடயமாகவுள்ளது. இதற்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்த காணாமல்போதல்கள் குறித்த செயற்குழுவினர் விடுத்திருந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், காணாமல்போன சம்பவங்களை அவசர மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருத்தில்கொண்டு உடனடித் தீர்வொன்று வழங்கப்படுவது அவசியமானது என்றார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் காணாமல்போனவர்கள் விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா அல்லது திரும்பி வருவார்களா என்பதற்கும் அப்பால் அவர்களின் குடும்பங்களை சமரசம் செய்யும் வகையில் தீர்வொன்று உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கி ஐந்து மாதங்கள் பூர்த்தியடைந்தபோதும் இதுவரை அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அது மாத்திரமன்றி குறித்த சட்டத்தின் கீழ் கைதிகள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு முரணானது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களின் விடுதலையின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இருந்தபோதும் 12 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது. ஒரு சிலருடைய கோஷங்களுக்குப் பயந்து கைதிகள் விடுதலையை அரசாங்கம் இழுத்தடிக்கக் கூடாது.

தமிழ் அரசியல் கைதிகள் மோசமான அனுபவங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படவேண்டிய காலம் கனிந்துள்ளது. அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்ததுடன், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை அமைப்பதற்கும் இணக்கம்காணப்பட்டது. துரதிஷ்டவசமாக இக்குழு இன்னமும் செயற்படவில்லை.

இவ்வாறான நிலையில் ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழியை மீறாமல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் காலம் இழுத்தடிக்காமல் துரிதமாக கைதிகளை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார். பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில், பழைய சட்டத்தின் கீழ் எவ்வாறு அரசியல் கைதிகளைத் தடுத்துவைக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment